கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மேலும், மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்புவோர் பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்தனர்.
உக்கடத்தில் இருந்து வெள்ளமடை வரை சென்று வரும் எண் 45 கொண்ட தனியார் பேருந்து, இன்று மாலை காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் போது, 3H என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வழி விடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தனியார் பேருந்து ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் நடத்துநர் வெங்கடேஷ் அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், 2 மணி நேரத்துக்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்கினர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காட்டூர் போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் இரு நடத்துனர்கள் மீது IPC 294(b), 323, 332 and 506(i) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
காயமடைந்த, அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திக் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் மற்றும் தர்ணா சம்பவத்தால், காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றி உள்ள அனைத்து பகுதியிலும் கடும் பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.