டாஸ்மாக் பார் ஊழியர்களை ஆபாசமான வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த 23-ஆம் தேதி கோவை சேரன்மாநகர், விளாங்குறிச்சி பிரதான சாலையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் தலைமையில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அங்கு நின்று கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் பார்ஊழியர்களைப் பார்த்து தென் மாவட்டத்திலிருந்து வந்தவங்க என கூறி ஆபாச வார்த்தையைக் கூறி திட்டி உள்ளார்.
இந்நிலையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதோடு மிரட்டல் விடுத்த அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-
தமிழ்நாட்டில் ஜாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து வாழும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுவாழ்வில் உள்ளவரின் இத்தகைய செயல் மாவட்ட ரீதியாக பிரிவினைவாதத்தை உண்டு படுத்தும் வகையில் உள்ளது.
இத்தகைய மாவட்ட ரீதியாக வேற்றுமை பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.