கோவையில் நடந்த தொழில் துறையினரின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரிடம் கொடிசியா பல்வேறு அம்சங்களை கொண்ட கோரிக்கைகளை அளித்துள்ளது.
கோவை: கோவை வந்த தமிழக முதலமைச்சரிடம் தொழில் துறையினர் கூட்டத்தில் கொடிசியா கீழ்க்கண்ட கோரிக்கைகளை அளித்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு அளித்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது:-
கோவை மாஸ்டர் பிளான்:
கோவையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஒற்றைச்சாளர அனுமதி:
நகர ஊரமைப்பு இயக்குநர், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் வீட்டு வளர்ச்சித் துறை ஆகியோரிடம் கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் தகுந்த மென்பொருளுடன் ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தபட வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு, தேவையான தெழிற்சாலை நில வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் பெறுவது தாமதமாகாமல் விரைவுபடுத்த முடியும்.
வங்கி மற்றும் நிதி சேவை:
பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய தொகையை விரைவாக பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
அரசுத் துறைகளிடம் இருந்து, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய தொகையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும்.
சிட்கோ மற்றும் சிப்காட் தொழிற்பூங்காக்களை போலவே, முழுமையான வசதிகளைக் கொண்ட அனைத்து தொழிற்பூங்காக்களுக்கும் அனைத்து சலுகைகள் மற்றும் மானியங்கள் அளிக்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய மற்றும் விரிவாக்க தொழிற்சாலைகளுக்கு 30% சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சட்டத்தின்படி கீழ்க்கண்ட முக்கியத் தொழில் துறைகளுக்கு 25% முதலீட்டு மானியம் வழங்கப்பட வேண்டும்.
•ஆட்டோமொபைல்
•சூரிய ஒளி தகடுகள்
•தோல் தொழிற்சாலை
•மின்சாதன உதிரிபாகங்கள் தொழிற்சாலை
•பம்ப் மோட்டார் தயாரிப்பாளர்கள்
ஐவுளி இயந்திர பாகங்கள் தயாரிப்பாளர்கள்:
இந்த நிதியானது கோயம்புத்தூரைவிட மற்ற நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோயம்புத்தூரில் தான் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) 2019 மார்ச் மாதம் வரையிலான தகுதியுள்ள கடன் விண்ணப்பங்களுக்குத் தான் கடன் உதவி வழங்கியுள்ளது. இன்னும் ஏராளமான சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடன் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வங்கியானது புதிய கடன் உதவி பெறுவோருக்கு மானிய உதவி இல்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசிடம் இருந்து கடன் உதவி மீதான மானியம் பெறுவதற்கு தற்போது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய தர நிர்ணய சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இது நடைமுறைக்கு பொருந்தாத படியால் இந்த நிபந்தனையை உடனடியாக நீக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வங்கிகளில் கடன் பெறுவதற்கு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 30,000 ரூபாய் எம்ஓடி கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. முன்பு இது 5000 ரூபாயாக இருந்தது. எனவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் பழைய கட்டணமான 5000 ரூபாயாக குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் எவ்வித பிணையும் இன்றி கடன் உதவி வழங்க வேண்டும்.
புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயக் கடன்கள்:
விவசாயிகள் வங்கிகளில் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளாக நிலம் வாங்குவதற்கும், வேளாண் கருவிகள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் வாரிசுகளுக்கு விவசாயம் சாராத தொழில் நடவடிக்கைகளுக்கு விவசாய நிலத்தை பிணையாக வைத்து அனைத்து வங்கிகளிலும் கடன் தொகை வழங்கப்பட வேண்டும்.
மதிப்புக் கூட்டு வரி:
வாட் முறை மற்றும் நுழைவு வரி தொடர்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து 20 ஆண்டுகள் கழித்து, இப்போது நுழைவு வரி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது தான் கோவிட் 19 முடக்கத்துக்கு பிறகு சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நுழைவு வரி என்பது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு மிகப் பெரிய சிரமம் தரும்.
தமிழ்நாட்டில் விற்பனை வரித்துறை சி பார்ம் கேட்பது கைவிடப்படவேண்டூம். ஜிஎஸ்டி அறிமுகம் ஆவதற்கு முன்பே பல மாநில அரசுகள் சி பார்ம் வழங்குவதை நிறுத்தி விட்டன. அதனால் வெளி மாநிலத்திற்குப் பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சி பார்ம் பெறுவது கடினமான செயலாக உள்ளது.
ஜிஎஸ்டி:
தமிழக அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழக அரசு தற்போது உள்ள ஜிஎஸ்டி வரம்புகளான 5%, 10% மற்றும் 15% என்று இருப்பதைக் குறைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
பில் டிரேடிங் முறையில் ஏற்படும் குற்றங்களை குண்டர் சட்டம் 1982ன் கீழ் கொண்டுவர உள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தொழிலாளர் சட்டங்கள்:
சிறு தொழிற்சாலைகள் சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தொழிலாளர்களின் நலனுக்காக இஎஸ்ஐ, பிஎஃப் இவற்றுக்கு பதிலாக ஒற்றை சமூக பாதுகாப்பு வரி கொண்டு வரப்பட வேண்டும், ஒற்றை சமூக பாதுகாப்பு வரியாக 15 சதவீதம் (நிறுவனம் 9 சதவீதம் மற்றும் தொழிலாளர் 6 சதவீதம்) விதிப்பது சிறு தொழில்துறைக்கும் உகந்ததாக இருக்கும். இந்த வரி விதிக்கப்படும் வரை இபிஎஃப் விதிமுறைகளில் கீழ்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
சிறு தொழிற்சாலைகள் தொழில் பழகுநர்களை 18 மாதங்களுக்கு பணியில் ஈடுபடுத்தவும் இந்த காலகட்டத்துக்கு இபிஎஃப் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
நிறுவன உரிமையாளர் மற்றும் தொழிலாளர் இருவரின் அதிகபட்ச இபிஎஃப் பங்களிப்பு தொகை 8 சதவீதத்திற்கு மேல் போக கூடாது.
இன்டென்ஸ்டிரியல் கோடு 2021 படி 300 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர் பணி புரியும் நிறுவனங்களுக்கு Employment Standing Order சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மற்றும் லே ஆப், ஆட் குறைப்பு காலங்களிலும் இந்த விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
15000க்கு மேல் மாத ஊதியம் பெறுவோறை இந்த இபிஎஃப் சட்டத்தின் கீழ் கொண்டு வராமல் விலக்கு அளிக்க வேண்டும். 60 வயது மேற்பட்டோரும் இபிஎஃப் அளிக்க வற்புறுத்தக்கூடாது.
20 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் அதற்கும் கீழ் எண்ணிக்கையை கொண்டு வரக்கூடாது. அவ்வாறு செய்தால் நீறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
நான்காம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பணி சேவைக்கான சூழல்களை நிறுவன உரிமையாளர் மாற்றி அமைப்பதை தடை செய்கிறது. அது மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும். மேலும் சமரச நடவடிக்கைகள் நடைபெறும் காலத்தில் பணி சேவைக்கான சூழல்களை நிறுவன உரிமையாளர் மாற்றி அமைப்பதை தடை செய்வதை மூன்றாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
லே ஆப் ஆட் குறைப்பு மற்றும் தொழிற்சாலை மூடலை தடுக்கும் விதி மூன்றாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
தொழில் பழகுநர் சட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள்:
தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாடு, பெறுவதற்கு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க உதவ வேண்டும். தற்போது மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான தொழில் திறனை அளித்து, சுய சார்புடன் பணியமர்த்தும் வகையில் ஒரு சரியான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய நடைமுறைகளைத் திட்டமிட வேண்டும். இது குறித்து அரசுடன் இணைந்து செயல்பட தொழில் அமைப்புகள் தயாராக உள்ளன.
ஊரக வளர்ச்சித் துறை, மாவட்டத் தொழில் மையம் மற்றும் தேவையுள்ள தொழில் அமைப்புகள் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்க முடியும். அதன் மூலம் ஊரகப் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி அமர்த்திக் கொள்ள முடியும்.
ஊரக வளர்ச்சித் துறை, மாவட்டத் தொழில் மையம் மற்றும் தேவை உள்ள தொழில் அமைப்பு இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். குறைந்தது பத்தாவது படித்தவர்கள் அல்லது பள்ளியில் இடை நின்றவர்களை அடையாளம் கண்டு தொழில் பயிற்சி தருவதற்கு மாநில அரசு 90% நிதியுதவி வழங்க வேண்டும்.
ஊரகப் பகுதி தொழிலாளர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கும்போது அவர்களின் பயிற்சிக் காலத்தில் தங்குமிடம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் பணி வழங்கும் பொழுது நகரங்களில் உள்ள தொழிற் சாலைகளில் தொழில்துறை தொழிலாளர் பணி கிடைக்கும்படி செய்ய வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்வோர் தொழில் திறன் பயிற்சி பெறுவதற்கு வகை செய்யப்பட வேண்டும். அந்த பயிற்சியை முடித்து வரும் அனைவருக்கும் அரசும் தொழிற்சாலைகளும் இணைந்து சான்றிதழ் வழங்கலாம்.
கல்லூரியில் இளநிலை படிப்பு படிக்கும் காலத்திலேயே கற்றலின் ஒரு பகுதியாக தொழில் பணி குறித்த சில பயிற்சிகளும் வழங்கலாம். அது பாடத்திட்டத்தில் இடம் பெற்று பிறகு படித்து முடித்த பிறகு தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லவோ அல்லது தொழில்முனைவோராக மாற உதவும்.
குறைந்தபட்ச ஊதிய சட்ட திருத்தம்:
தற்பொழுது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பொதுவான பொறியியல் தொழிற்சாலைகள் வகையின் கீழ் வருவதால், ஊதியம் வழங்குதல் குறித்த வழிகாட்டு நெறிமுறை 2020யின் கீழ் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் தேவையான தகுந்த திருத்தங்களை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம்:
கணிப்பொறி மற்றும் அது சார்ந்த கணினித் திரை, சர்வர், பிரிண்டர் மற்ற மின்னணு சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கென்று ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் கோவையில் அமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் முக்கியமான மின்னணு சார்ந்த ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக திகழும் தமிழகம், சுமார் 1.27 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இது போன்ற சிறப்பு பொருளாதார மண்டலம் அமையும் போது மேலும் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு ஆயிரக் கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்கள்:
கோவை சூலூர் பகுதியில் 400 ஏக்கர் நிலம், பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் பூங்கா ஏற்படுத்த கொள்கை முடிவு உள்ளது. இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் தென்னிந்திய பாதுகாப்புத்துறை தொழில் வழித்தடத்தின் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆர்டர்கள் பெறுவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே உள்ள இடைவெளியை அகற்றும் வகையில் ஒரு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து உதவ வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆதரித்து, அவை பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான தரச் சான்றிதழ் பெறுவதற்கு 100% மானியத்துடன் உதவ வேண்டும்.
பாதுகாப்புத்துறை உட்கட்டமைப்பு மற்றும் சோதனை மையம்:
தமிழ்நாட்டு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் வழித்தடத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒரு பாதுகாப்பு துறைக்கான உட்கட்டமைப்பு மற்றும் சோதனை மையம் ஒன்றை பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தித் துறை, ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த மையத்தை கோவையில் உருவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மையம் அமைவதற்கான நிதியில் 75% மத்திய அரசு ஒதுக்க உள்ளது. மீதி உள்ள 25% நிதி உதவியை மாநில அரசு ஒதுக்குவதன் மூலம் இந்த மையம் இங்கு அமையும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் இங்கு பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் சோதனை, தரக்கட்டுப்பாடு செய்ய ஏதுவாக அமையும்.
பெரிய தொழில் நிறுவனங்களும் தாங்கள் பாதுகாப்பு துறைக்கு தயாரித்து வழங்கும் உற்பத்திப் பொருட்களின் தரத்தை சோதிக்க இந்த மையம் உதவிகரமாக அமையும்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் வழித்தடத்தில் தமிழகமும் இருப்பதால், பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை கோவையில் அமைப்பதால் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் உற்பத்தி இங்கு வளர்ச்சி பெறும்.
தேசிய மற்றும் தர நிர்ணய சான்றிதழ் பெறுவதற்கு உண்டான மானியம் உயர்த்தப்பட வேண்டும். மற்றும் சர்வதேச தர சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 50 லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும்.
இராணுவ தளவாட உற்பத்தி பொருட்களுக்கான சோதனை மற்றும் உள்கட்டமைப்பு திட்டம்
மேற்சொன்ன திட்டத்தின்கீழ் இராணுவ தளவாட உற்பத்தி துறை தமிழகத்தின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு இராணுவ தளவாட சோதனை மையத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மையம் அமைவதற்கு கோயம்புத்தூர் ஏற்ற இடமாகும்.
இந்திய முப்படைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில் அமையும் இந்த மையத்தின் திட்டச் செலவான 4000 கோடி ரூபாயில் மத்திய அரசாங்கம் 75% மேற்சொன்ன திட்டத்தின்கீழ் வழங்குவதால் மீதி உள்ள 25% நிதி உதவியை வழங்குமாறு மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பெரும் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய ஸ்டார்ட் அப்கள் இந்த சோதனை மைய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கான சான்றிதழைப் பெறமுடியும்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்:
புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கும், கூடுதல் திறன் பெறுவதற்கும் மிகவும் தாமதமாகிறது. உட்கட்டமைப்பு பொருட்கள் மற்றும் மின் மாற்றிகள் போதுமான அளவு இருப்பில் இல்லை என புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி தீர்வு காண கேட்டுக்கொள்கிறோம்.
புதிய கட்டிடங்களுக்கான மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் திட்ட குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட நிறைவு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும் நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு மற்றும் முன் பக்கத்தில் தேவையான அளவு இட ஒதுக்கீடு மற்றும் கட்டிட உயரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். மேற்சொன்னவற்றில் சிறிய அளவில் மாற்றங்களைத் தளர்த்த வேண்டும்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகள் மற்றும் 2019ன் படி அதிக உயர்ந்த கட்டிட கட்டுமான வகைக்குள் வராத கட்டிடங்களின் அதிகபட்ச உயரம் 18.80 மீட்டர்கள் ஆகும். தற்பொழுது தமிழ்நாடு மின்பகிர்மான உயர்ந்த கட்டுமானம் என்று புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்.
தாழ்வு மின் அழுத்த மின்சார பிரிவில் 112 கிலோ வாட் என்ற வரையறையை 150 கிலோ வாட் என்று உயர்த்தி இருப்பது சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.
சமீப காலமாக உயர்மின் அழுத்த இணைப்பு கொண்ட தொழிற்சாலைகளுக்கு மின் மாற்றி மற்றும் அதன் உபகரணங்கள் உடன் நிறுவுவதற்கு இணைப்பு வேண்டுபவரின் செலவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் அனைத்து அறிவுறுத்தல்களும் நேரடியாக அவர்களை சென்றடைய வகை செய்ய வேண்டும். அதைப்போல மின் இணைப்புக்கான கணக்கெடுப்பு தொடங்குவது தெளிவாக இணைப்பு பெறுபவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சிரமங்கள் தவிர்க்கப்படும்.
24X7 என்ற அடிப்படையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் சார்ந்த முன் அறிவிப்புக்கான தர ஒருங்கிணைப்பு முகமை:
முழுக்க பருவ நிலை சார்ந்து இயங்கும் ஆற்றல் சார்ந்த தொழில் என்ற முறையில் ஏற்கனவே தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு பல கட்டணங்கள் செலுத்தி வரும் நிலையில் புதிதாக அமைய உள்ள இது போன்ற முகமைகள் திரும்பப் பெறவேண்டும்.
125 KVA மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் படைத்த டீசல் ஜெனரேட்டர்களுக்கு தேவையான மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள்:
முன்பு இருந்த மின் தட்டுப்பாடு சிக்கல் அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது. தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ள மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. ஏராளமான காற்றாலைகள் மற்றும் சூரியஒளி மின்சார தயாரிப்பு கருவிகள் மூலம் பசுமை ஆற்றல் உற்பத்தி இங்கு அதிகரித்துள்ளது.
தற்போது உள்ள நிலையில் ஒரு மாற்று ஏற்பாடாக குறுகிய நேரத்திற்கே ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன. டீசல் விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியிலும் இதன் பயன் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம் இதுகுறித்து எடுத்துவரும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
பவுண்டரி தொழில்:
பவுண்டரி மணலை மறுசுழற்சி செய்து சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அந்த மணலை கொண்டு தரையில் பதிக்கக் கூடிய ஓடுகளை உருவாக்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தமிழக அரசின் ஆதரவை எதிர்நோக்குகின்றோம்.
பவுண்டரியில் இருந்து வெளியேற்றப்படும் மணலை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நிலை வரும் வரை அவற்றைச் சரியான முறையில் அகற்றுவதற்கான வழிவகைகள் வேண்டும். ஆபத்தற்ற இந்த மணலைக் கொண்டு கைவிடப்பட்ட கிணறு மற்றும் கல்குவாரிகளை நிரப்ப இயலும். இந்த முறை வெகு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதோடு சூழலுக்கும், சுற்றுப்புறங்களுக்கும் கேடு ஏதும் ஏற்படுத்துவதில்லை. இது குறித்து துறை சார்ந்த அறிவுரைகள் வேண்டப்படுகிறது.
பவுண்டரி, பொறியியல் உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள தொழில்முனைவோர் தொழிற்சாலைகளை சுற்றி உள்ள பகுதிகளை, தொழிற்சாலை நடத்த அனுமதி பெற்ற சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை அதன் பிறகு பச்சை என்று குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதன் மூலம் தேவையற்ற நிர்வாகச் சிக்கல்களை தவிர்க்க இயலும்.
நமது மாநிலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அடிப்படை தொழில்கள் ஒன்றாக பவுண்டரி தொழில் கருதப்படுகிறது. கோவையில் உள்ள பவுண்டரிகளின் திறன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பணியாளர் பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்:
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகவும், இந்தியாவில் 20வது பெரிய நகரமாகவும் கோயம்புத்தூர் திகழ்கிறது. நாட்டின் விமான சரக்கு போக்குவரத்தின் கோயம்புத்தூர் 13வது இடம் வகிப்பதோடு தேவையான உட்கட்டமைப்பு அமையுமானால் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் நிலை உள்ளது. ஒரு நல்ல விமான நிலைய உட்கட்டமைப்பு போதுமான இடம் கிடைக்கும்போது தான் உருவாக முடியும். அந்த வகையில் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 650 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லங்கா, ஏர் அரேபியா அண்டு எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கிருந்து சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. அதற்கேற்ப கோவை விமான நிலைய ஓடுபாதை அகலப்படுத்தப்பட வேண்டும். இந்த விரிவாக்கத்தின் மூலமாக கோயம்புத்தூர் விமான நிலையம் மிகப்பெரிய வருவாயை ஈட்ட முடியும்.
இருவழி விமான சேவை ஒப்பந்தம்:
இருவழி விமான சேவை ஒப்பந்த மூலம் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்களது சேவையை அளிக்கும் வகையில் கோயம்புத்தூரையும் அந்த பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
உட்கட்டமைப்பு:
சமீபத்தில் பெய்த மழையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். மேலும் இருபுறமும் உள்ள கட்டிடங்கள் தாழ்ந்து போகாதவாறும் சாலை கூடுதல் உயரம் அடையாமல் சாலைகளை பராமரிக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் 3000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மாபெரும் தொழிற்பேட்டையை கோயம்புத்தூரில் உருவாக்க வேண்டும்.
கோயம்புத்தூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக திகழ்வதால் அதனை சுற்றி உள்ள 100 கிலோமீட்டர் தொலைவிற்குள் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகள், மேம்பாலங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் கையாளுதல் பணிகளை நவீனப்படுத்துதல், பேருந்து, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவை விரைவுபடுத்தப்பட வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் 24×7 சூயஸ் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் நிலத்தடி சாக்கடை நீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். இதற்காக தோண்டப்பட்ட குழிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரைந்து சரி செய்யப்பட வேண்டும்.
கொச்சின் எல்லை சாலை - பல்லடம் முதல் மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
பல்லடம் முதல் சிந்தாமணிபுதூர் வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் - கரூர் விரைவு நெடுஞ்சாலை உருவாக்கப்பட வேண்டும்.
செங்கப்பள்ளி முதல் கிருஷ்ணகிரி வரையிலான உள்ள கடமையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக ஆறு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும்.
கிழக்கு & மேற்கு பைபாஸ் சாலையை உருவாக்க வேண்டும்.
சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட வேண்டும். சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்பாளையத்தில் இருந்து நான்கு வழிச் சாலையாக்கப்பட வேண்டும்.
எல் அண்டு டி பைபாஸ் சாலையில் (NH 544) நீலம்பூர் முதல் மதுக்கரை வரை ஆறு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும்.
கீழ்க்கண்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்:
சிங்காநல்லூர், திருச்சி சாலை NH 81
சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை NH 53
சரவணம்பட்டி, சத்தி சாலை NH 948
துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை NH 181
நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து முனையம் அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அரசின் எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த கொள்கைகள்:
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் இஎஸ்டிஎம் தயாரிப்பு முறை மின்சார வாகனங்கள் உற்பத்தி, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் விண்வெளி சார்ந்த ஸ்டார்ட்டு அப் நிறுவனங்கள் ஆகியவற்றில் புதிய உற்பத்திப் பொருட்கள் மேம்பாட்டுக்கும், தயாரிப்புக்கும் தேவையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இது சர்வதேச அளவிலான தொழிற்சாலைகளையும், ஸ்டார்ட்டு அப் நிறுவனங்களையும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பு வழங்கவும் உதவும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான அரசு அதிகாரிகளின் கெடுபிடி தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு தனி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தன் உறுதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சிறு தொழிற்சாலைகள் சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கொடிசியா கேட்டுக் கொள்கிறது. 5௦ பணியாளர்களுக்கு கீழ் உள்ள தொழிற்சாலைகளில் அரசு அதிகாரிகளின் நேரடி ஆய்வுகளைத் தவிர்க்கலாம்.
பெரும் தொழில் நிறுவனங்கள் கோயம்புத்தூர், சேலம், திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இப்பகுதியின் தொழில் வளர்ச்சியும் பொருளாதாரமும் மேம்படும்.
தமிழக அரசால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ஒரு தனி “ஆன்லைன் மார்கெட்டிங் போர்டல்” உருவாக்கப்பட வேண்டும்.
தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேற்கூறிய கோரிக்கைகளை கவனித்து ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.