கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் "பொருநை" அகழ்வாராய்ச்சி கண்காட்சியை வரும் மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 19 தேதி தமிழக முதல்வர் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவையில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சி மற்றும் "பொருநை" அருங்காட்சியகம் கண்காட்சிகளை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார். அதற்குப் பின், ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நடத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் வருகையையொட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஓராண்டில் பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதல்வர் வழங்கியுள்ளார். அந்த சாதனைகள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
நாளை மாலைக்குள் கண்காட்சி ஏற்பாட்டு பணிகள் முடிவடையும், அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியை, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவித்தார்.