கோவை மாநகராட்சியில் சொத்து உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி 70-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் இம்மாதம் 13-ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று கோவை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, அனைத்துப் பகுதிகளிலும் சொத்து வரியை உயர்த்த கூடாது என மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.
அதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி வருவாய் துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினத்திடம் தங்களது மனுக்களை ஒவ்வொருவராக அளித்தனர்.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி கூறியதாவது:-
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வை 15-சதவீதம் முதல் 150-சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களேஆன சூழலில், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், 6- ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த இந்த சூழலில் உடனடியாக சொத்து வரி உயர்வு தேவையில்லை என்பதே எங்களது கருத்து.
தவிர்க்க முடியாத காரணத்தால் வரி உயர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் 15- சதவீதத்திற்கு உள்ளாக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது. ஆனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்துவரி உயர்த்தினால் தான் மத்திய அரசின் நிதி பெற முடியும் என்று சர்வாதிகாரப் போக்குடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி மன்றத்தின் உரிமை. இந்த அளவு வரியை உயர்த்தினால் மக்கள் தாங்கமாட்டார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளோம்.
நடைபெற உள்ள நிதிக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் எனக் கூறினார். இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் கோவை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி, சுமதி உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.