கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொடூரமாக கொலை செய்த இருவரில், ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடன் எம்.ஜி.ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொழில் தேவைக்காக பொன்னுச்சாமி, ராஜனிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் ரூ.3 கோடி திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை திரும்ப தர தாமதமானதால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், ராஜன் மற்றும் முத்துக்குமார், துடியலூர் அருகே உள்ள பொன்னுச்சாமிக்கு சொந்தமான இடத்தை ஒருவர் பார்க்க வருவதாக நாடகம் ஆடி அவரை அங்கு வரவழைத்துள்ளனர். அப்போது, அங்கு வந்த பொன்னுச்சாமியை, ராஜன் மற்றும் முத்துக்குமார் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த வழக்கில், இருவரையும் துடியலூர் போலீசார் கைது செய்த நிலையில், பொன்னுசாமியை கொடூரமாக கொலை செய்து சிறையில் உள்ள ராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான, நகல் சிறையில் உள்ள கொலை குற்றவாளியான ராஜனுக்கு இன்று வழங்கப்பட்டது.