கோவை அவினாசி சாலையிலுள்ள ஜி.டி அரங்கத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் "அமுதம்" திட்டத்தை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை அவினாசி சாலையிலுள்ள ஜி.டி அரங்கத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் "அமுதம்" திட்டத்தை மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
துவக்க விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன், தொடர்ந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையானதை செய்து வருகிறார். பெண்களின், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்படுகிறார்.
மக்களோடு சேர்ந்து மக்களுக்கு பணி செய்ய எங்களுக்கு பிரதமர் ஊக்கமளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, ஏழை குடும்பத்தை சேர்ந்த பால் ஊட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், பால் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக வானதி சீனிவாசன், "அமுதம்" என்ற இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்" என்று புகழாரம் சூட்டினார்.
வரும் காலங்களில், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் மக்கள் வாக்களித்து அதிக இடங்களில் பாஜகவை வெற்றிபெற வைக்க வேண்டும், என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், பாஜாகவில் பெரிய பொறுப்பில் இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதி மக்கள் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்றும் மாதம் 4 ஆயிரம் இளம்பெண்களுக்கு சானிட்டரி பேட் இலவசமாக வழங்கி வருகிறோம். நம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும், ஊட்டச்சத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது, என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், இன்று அறிமுகப்படுத்தியுள்ள "அமுதம்" திட்டம் மூலம், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்பவர்களுக்கு மளிகை கடை மூலம் தினமும் 250 மில்லி பால் வழங்கப்படும், என்று கூறினார்.
"பொதுவாக, கொங்கு பகுதியில் மாட்டில் இருந்து பால் கறக்கும் போது, "குழந்தை பால்" என்று ஒரு பகுதியை பிரித்து வைக்கும் பழக்கம் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அமுதம்" திட்டம் அமைந்துள்ளது", என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
"எனக்கு பிடித்த இரண்டு பெண்மணிகள் மேடையில் இருக்கிறார்கள். ஒன்று வானதி சீனிவாசன், மற்றொருவர் நிர்மலா சீதாராமன். அண்மையில், நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், நிர்மலா சீதாராமன் 100 இரும்பு பெண்மணிகளில் 34 வது இடத்தை பிடித்துள்ளார்.
எப்போதும், நிமிர்ந்து நிற்கும் பெண்மணி நம் நிதி அமைச்சர்; பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தும் பெண்மணி நிர்மலா சீதாராமன்", என்று புகழாரம் சூட்டினார்.
இறுதியில், பாஜகவின் இரும்பு கோட்டையாக கோவை மாறும் என்று அவர் தெரிவித்தார்.