ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியினரின் அறிவு-சார் மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமை கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்தியது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியினரின் அறிவு-சார் மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமை கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்தியது.
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து, பழங்குடியினரின் அறிவு- சார் மேம்பாட்டிற்கான ‘விழிப்புணர்வு முகாமையும்’, பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட (Scheduled Tribe Component - STC) துவக்க விழாவினையும், 5 ஜனவரி 2022 அன்று, அட்ட கட்டியில் நடத்தியது.
விழாவில் துவக்க உரை ஆற்றிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (ATR) துணை இயக்குனர் M.G. கணேசன் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தினை செயல்படுத்திட ஆனைமலை புலிகள் காப்பகத்தினை தேர்ந்தெடுத்த கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மற்ற புலிகள் காப்பகங்கள் போலன்றி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு பழங்குடி இன மக்கள், தொலை தூரங்களில் வசித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்ட கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தை பாராட்டிப் பேசினார்.
ஆசிய யானைகளைக் கையாள்வதில் ஆழ்ந்த அறிவு மற்றும் திறமை கொண்டு, யானைகளுக்கு பயிற்சி அளிப்பதில் வனத்துறையினருக்கு பெரும் உதவி புரியும் ‘மலசர்’ இன பழங்குடியினரைப் பற்றிக் கூறிய துணை இயக்குநர், பழங்குடியினரைக் காப்பாற்றுவது காடுகளைக் காப்பாற்றுவதற்குச் சமம் எனவும் குறிப்பிட்டார்.
பின்னர், கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் தமிழ் விரிவாக்கப் பிரசுரங்களை வெளியிட்ட அவர், பழங்குடியினர் இவற்றைப் பயன் படுத்தி பலன் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விழாவில் தலைமையுரை ஆற்றிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஜி ஹேமப்ரபா மற்ற பிரிவினரைக் காட்டிலும், பழங்குடியின பிரிவினரிடையே கல்வியறிவு குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கல்வியானது, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலுவது மட்டுமின்றி, பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையும் காத்திட வழிவகுக்கும் என பழங்குடியினர், குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இம்முகாமில் எங்களது சொல்லை விட உங்களது செயலே முக்கியம் என்று பழங்குடியினரிடம் குறிப்பிட்ட இயக்குனர், STC திட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இதனை திறம்படப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பழங்குடியினரின் ஒத்துழைப்போடு, அடுத்த சில ஆண்டுகளில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பழங்குடியின குடியிருப்புகளில் இத்திட்டத்தின் நேர்மறையான பயன்களை காண இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
STC திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் து.புத்திர பிரதாப் தனது கருத்துரையில், இந்த திட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் முதல்முறையாகச் செயல்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
நாகரூத்து -1, நாகரூத்து – 2, பழைய சர்க்கார்பதி, சின்னார்பதி, கூமாட்டி மற்றும் பாலக்கிணறு பகுதிகளில் அறிவியல் பூர்வமாகத் தேவை மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் அடிப்படையிலேயே, இத்திட்டம் செயல் படுத்தப் படுகிறது.
நம் நாட்டில், 47 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதைக் குறிப்பிட்ட அவர், இந்த விழிப்புணர்வு முகாமில் ஊட்டம் தரும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் தொழில் நுட்பங்களைப் பழங்குடியினருக்கு அறிமுகம் செய்து, தரமான காய்கறி விதைகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இம்முகாமில் பழங்குடியினரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வானொலிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டு, அவர்களின் அறிவு-சார் மேம்பாட்டிற்கு உதவும் வானொலி நிகழ்ச்சிகள் குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவுள்ளது.
இவை தவிர, தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பண்ணைக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நாற்றுகளும் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இம்முகாமில், சின்னார்பதி பகுதி மக்கள், ஏனைய பழங்குடியின கிராமத் தலைவர்கள், கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் வல்லுனர்கள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.