தமிழ்நாடு திராவிடர் கழகமானது திராவிட இயக்க பேரவையில் இணையும் விழா மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கோவை: தமிழ்நாடு திராவிடர் கழகமானது திராவிட இயக்க பேரவையில் இணையும் விழா ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் தலைவர் காசு.நாகராசன் தலைமையில் அக்கழகத்தினர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், "இந்த இயக்கம் என்பது அறிவூட்டும் இயக்கமே தவிர வெறியூட்டும் இயக்கம் அல்ல, இந்த நிமிடத்திலிருந்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில அமைப்புச் செயலாளராக நாகராஜன் அறிவிக்கப்படுகிறார்.
அந்த பொறுப்பை வகித்து வந்த புலேந்திரன் இந்தப் பேரவையின் மாநில முதன்மை செயலாளராக அறிவிக்கப்படுகிறார். திராவிட இயக்கத்திற்கு அன்றிலிருந்தே சித்தாந்த எதிரிகளும் இருந்தார்கள் சில்லறைகளும் இருந்தார்கள். அவர்களைப் பற்றி நான் அந்த மேடையில் பேச வேண்டாம்.
வருகின்ற பிப்ரவரி முதல் வாரம் நீட் தேர்வை எதிர்த்தும் மாநில உரிமைகளை வலியுறுத்தியும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாநகரங்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடைசி வாரத்தில் தமிழகம் முழுவதும் ஊர்தி பயணத்தை நடத்தும். இதற்காக அனைவரும் பங்கேற்பாளர்களாக வாருங்கள் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த மேடையில் மூன்று தலைமுறையினர்களைப் பார்க்கிறேன். சிலர் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள், அவ்வாறு செல்கின்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து திராவிடப் பற்றை வழங்க நீங்கள் முன்வர வேண்டும் அதனை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.
கோவை மாவட்டத்தை ஒரு சிலருக்கு மட்டும் சொந்தம் என்பதைப் போலக் கடந்தகாலங்களில் சித்தரித்துக் கொண்டிருந்தார்கள், அப்படி எனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களை ஏன் முதல்வரிடம் மக்கள் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அவரது இதயத்தில் கோவைக் என தனி இடத்தை கொடுத்துள்ளார்.
சென்னை அடுத்து கோவையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. நம்முடைய தேவைகளை எல்லாம் நாமே பூர்த்தி செய்கின்ற வகையில் MADE IN TAMILNADU என்ற புதிய நிலையில் முதல்வர் உருவாக்கி வருகிறார் என தெரிவித்தார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் முதல்வர் சமீபத்தில் அறிவித்த மஞ்சள் பை வழங்கப்பட்டது.