பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு மற்றும் ஸ்பாண்டகெஸ் நூல் மீதான குவிப்பு வரி நீக்கத்திற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட எதிர்பாராத தீமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கவும், இந்தியாவை வேகமாக `வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்றவும், இந்திய ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித் தன்மையை அதிகரித்து சவால்களை வாய்ப்புகளாக மாற்றவும் மத்திய அரசு அவ்வப்போது கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்து நாடு ஏற்றுமதியில் சாதனை படைக்க உதவியது.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம், எலஸ்டோமெரிக் நூல் இழை மீது விதிக்கப்பட்டிருந்த குவிப்பு வரியை நீக்கியதற்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சா நிர்மலா சீதாராம் மற்றும் மாண்புமிகு மத்திய ஜவுளித்துறை அமைச்சா், பியுஷ் கோயல் ஆகியோருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். டெனிம் உள்ளிட்ட ஆடைப் பொருட்களில் எலாஸ்டோமெரிக் இழை நூலை பயன்படுத்துவது மதிப்புக் கூட்டலை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
குவிப்பு வரி நீக்கம், சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் தொழிலுக்கு ஒரு சமதளத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத உயர்தர எலாஸ்டோமெரிக் இழை நூல்களை நியாயமான விலையில் இறக்குமதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல வரலாற்றுச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதோடு, ஆத்மனிர்பார் பாரக் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கும், உலகளவில் இந்திய உற்பத்தியாளர்களின் போட்டி ஸ்திரனை அதிகரித்து நாட்டை போட்டித் தன்மை கொண்ட உற்பத்தியாளராக மாற்றுவதற்கு பல்வேறு துணிச்சலான மற்றும் செயலுக்குமான முயற்சிகளை எடுத்து வருவதாக பாராட்டினார்.
ஏற்கனவே செயற்கை பஞ்சு மற்றும் அதன் மூலப்பொருட்களான PTA, MEG, PSF, VSF, acrylic fibres ஆகியவற்றின் மீதான குவிப்பு வரியை நீக்கிய அரசு, தற்போது எலாஸ்டோமெரிக் இழை நூல் மீதும் குவிப்பு வரியை நீக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். DGTR அமைப்பு விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரியை தீர்மானத்தை தள்ளுபடி செய்ததற்கும் அதனை CESTAT அமைப்பு ஆமோதித்ததையும் அவர் வரவேற்றுள்ளார். இது போன்ற செயல்திறனுள்ள மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் சமீபத்தில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக மாற்றும் என்றும் பெரிய முதலீடுகளை இந்தியா ஈர்த்து செயற்கை பஞ்சு உற்பத்தி பொருடகளின் சங்கிலியில் நாடு அதிவேக வளர்ச்சி விகிதத்தை அடைய செய்யும் என்றும் ரவி சாம் தெரிவித்தார்.
இந்நிலையில், பெட்ரோலின் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6 ஆகவும் குறைத்து, பெட்ரோல் விலையை ரூ.9.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 7 ஆகவும் குறைக்கும் சரியான முடிவினை சைமா தலைவர் ரவி சாம் வரவேற்றார். ஜவுளித் தொழிலில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு அரசின் இந்த முடிவால், போக்குவரத்து செலவு குறையும் என்றும், இது ஜவுளித் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பருத்தி விலை உயர்வால் ஜவுளித் தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், தற்போது எரிபொருளுக்கு மத்திய கலால் வரி குறைத்துள்ளதால், பருத்திக்கான போக்குவரத்து செலவு தமிழகம் போன்ற 95 சதவீத பருத்தியை இறக்குமதி செய்யும் மாநிலங்களுக்கு குறையும் என்று அவர் கூறினார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியை குறைத்தமைக்கும், மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு மற்றும் இரும்பு மற்றும் எஃகு மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்ததற்கும் அரசுக்கு சைமா தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் விலையைக் குறைக்க உதவும் என்றும், இது விவசாயத்திற்கு அடுத்தபடியான நாட்டில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஜவுளி மற்றும் ஆடை தொழிலுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.