நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளை குறி வைத்து பெட்ரோல், டீசல், மற்றும் தார் திருடப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளை குறி வைத்து பெட்ரோல், டீசல், மற்றும் தார் திருடி வந்த இருவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் மதுக்கரை போலீஸ் உதவி ஆய்வாளர் கவியரசு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சீரபாளையம் அருகே வந்த போது சந்தேகத்திற்கிடமாக 5 இரும்பு பேரல் டிரம்களோடு நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை மலுமிச்சம்பட்டி ராஜ கணபதி நகரை சேர்ந்த ஞானபிரகாசம் (48) என்பதும், இவர் நெடுஞ்சாலையில் வரும் பெட்ரோல், டீசல் மற்றும் தார் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளை ஓட்டுனர்கள் காலை நேரங்களில் சாலையில் நிறுத்தி விட்டு தூக்கும் போது, பெட்ரோல், டீசல் மற்றும் தாரை இரும்பு பேரல் மூலம் திருடிச் சென்று அதை சீரபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பதுக்கி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
மேலும் தாரை உள்ளூர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் திருடப்படும் பெட்ரோல் மற்றும் டீசலை எந்த அனுமதியும் இன்றி உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சீரபாளையத்தில் இருந்த தனியார் தோட்ட குடோனில் போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த சுமார் 775 கிலோ தார் பறிமுதல் செய்யப்பட்டது, இதையடுத்து ஞானபிரகாசம் மீது பெட்ரோலியம் விற்பனை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதே போல் அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் மதுக்கரை லட்சுமி நகர் பேஸ் 2 பகுதியில் மதுக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக திருடி பதுக்கி வைத்திருந்த 775 கிலோ தார் மற்றும் திருட பயன்படுத்திய வேன் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்த மாச்சம்பாளையத்தை சேர்ந்த பொன்ராஜ் (38) என்பவரை கைது செய்தனர். நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளை குறி வைத்து பெட்ரோல், டீசல், மற்றும் தார் திருடப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.