தமிழக அரசால் அமைக்கப்பட்டு குறுந்தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள், குறுந்தொழில் முனைவோர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது.
கோவை: தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரிசீலித்து நிறைவேற்றவும், தொழில் மற்றும் தொழில் முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என்று காட்மா சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் C.சிவக்குமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் C.சிவக்குமார் கூறியுள்ளதாவது:-
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் 40-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. காட்மா சங்கத்தில் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எண்ணிக்கையில் அதிகமான தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும், தொழில் முனைவோர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொழில் முனைவோர்களின் வேண்டுகோள் கோரிக்கைகளாக அளிக்கப்படுகிறது.
கோரிக்கைகள்:-
ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் சலுகைகளும், கடன் உதவிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கிடைப்பதில் நிறைய இடர்பாடுகள் இருப்பதால், குறுந்தொழில் முனைவோர்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக, "குறுந்தொழில் வளர்ச்சி வங்கி" தமிழக அரசால் அமைக்கப்பட்டு குறுந்தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் பட்சத்தில் குறுந்தொழில் வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான நிதி ஆதாரத்திற்கு, தமிழக அரசின் பங்களிப்புடன் குறுந்தொழில் முனைவோர்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும்.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் பெரும்பான்மையான தொழிற்கூடங்கள் இட பற்றாக்குறையின் காரணமாக ஊரக, மாநகர மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பரவலாக இயங்கி வருகின்றன.
அக்குறுந்தொழிற்கூடங்களின் மீது அருகாமையில் வசிப்பவர்களால் தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக ஒலி மாசு, காற்று மாசு என்று புகார் அளிக்கப்பட்டு தொழிற்கூடங்களை பூட்டி சீல் வைக்கும் முறை தொடர்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் தொழில் கூடங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது தொழிற்கூடங்கள் வெள்ளை பிரிவில் வருவதால் (White Category) மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று தேவை இல்லை என பதில் அளிக்கப்படுகிறது. எனவே இது குறித்து தெளிவு படுத்தப்பட்டு, தொழிற்கூடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் காணப்படும் இட நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காண, கோவை மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவ்வாறு அமைக்கப்படும் தொழிற்பேட்டைகளில், குறுந்தொழில் முனைவோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் 3 சென்ட் அளவிலிருந்து இடம் பிரித்துக் கொடுக்கப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
காட்மா சங்கத்தின் சார்பாக எவ்விதமான லாப நோக்கமும் இல்லாமல், குறுந்தொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் பொழுது, தமிழக அரசின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கி, அரசு துறைகள் சார்பாக முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளையும், சம்பிரதாயங்களையும் விரைவாக முடித்து கொடுத்து, தொழிற்பேட்டை அமைக்க உதவ வேண்டும்.
தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்பு உள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் பிரிவான 3 B பிரிவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்புள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கு 3A-1 பிரிவின்கீழ் மின் இணைப்பு வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
தற்பொழுது தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் சராசரியாக 14 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. குறுந்தொழில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வட்டியை குறைத்து, ரூபாய் 50 ஆயிரம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 5 சதவீத வட்டியில் சொத்துப் பிணையமின்றி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாயிலாக கடனுதவி வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வாயிலாக கடன் உதவி பெருகின்ற தொழில் முனைவோர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகபட்சம் 7 ஆண்டுகள் என்ற அளவிற்கு நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசம் வழங்கப்படுவதாலும், மாதத்தவணை தொகை அதிகமாக உள்ளதாலும் கடனை திருப்பி செலுத்த தொழில் முனைவோர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டூ கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, குறு, சிறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
குறுந்தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சரிசெய்யப்பட குறுந்தொழில் முனைவோர் நல வாரியம் அமைக்கப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கு வரும் இடர்பாடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். மேலும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மருத்துவ காப்பீடு செய்து தரப்பட வேண்டும்.
தற்பொழுது குறுந்தொழிற்கூடங்கள் ஜாப் ஆர்டர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருவதால், தமிழக மின்சார வாரியம், போக்குவரத்து துறை, விவசாயம், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான, இன்ஜினியரிங் சம்பந்தமாக கொள்முதல் செய்கின்ற உதிரி பாகங்களில் 70% குறுந்தொழில் முனைவோர்களிடமிருந்து தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
மேலும் தற்போது தமிழக உள்ளாட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்பட்டு வரும் 1994 ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 159 மற்றும் 172 அரசாணை எண் 255, 1994 ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 159 மற்றும் 160 அரசாணை எண் 221, 1994 ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 13, அரசாணை எண் 8 ஆகிய உள்ளாட்சி சட்டங்களை காரணமாக காண்பித்து 1 லேத் அல்லது 2 லேத் வைத்திருக்கும் தொழில் முனைவோர்களிடம் கூட தொழில் வரி மற்றும் அவர்களிடம் பணிபரியும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வரியும் செலுத்த வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளால் வலியுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே தொழில் மற்றும் பொருளாதார மந்த நிலை, கொரோனா தடுப்பு ஊரடங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு இது மேலும் மிகுந்த நெருக்கடியை தரக்கூடியதாக இருப்பதால், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளாட்சி சட்டப் பிரிவுகளில் இருந்து ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் இயங்கி கொண்டிருக்கும் குறுந்தொழில்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு வேலையாட்களை மட்டும் வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்கூடங்களுக்கு தொழில் வரி மற்றும் தொழிலாளர் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
தற்போது தொழில் முனைவோர்களுக்கு, அவர்களது தொழில் முதலீட்டு கடன்களுக்கான தமிழ்நாடு அரசின் 25 சதவீத மானியத்திற்கான நிதி 10 மாதங்களிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் மானியத்திற்கு விண்ணப்பித்த தொழில் முனைவோர்களில் ஒரு சிலருக்கு மானியம் கிடைப்பதற்கு ஒரு வருடகாலம் ஆகிறது. சிலருக்கு விண்ணப்பித்த சில நாட்களிலேயே மானியத்தொகை கிடைத்துவிடுகிறது. எனவே இதுபோன்ற கால தாமதங்கள் தவிர்க்க 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு அரசு மானியத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்.
தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் 25 சதவீத தொழில் முதலீட்டு மானியம், அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மாவட்ட தொழில் மையத்தால் செலுத்தப்படுகிறது. ஒரு சில வங்கிகளில் இந்த மானியத் தொகையானது எவ்விதமான வட்டியும் இல்லாமல் வைப்புத் தொகையாக கணக்கில் வைக்கப்பட்டு வங்கிக்கடன் முடியும் தருவாயில் வங்கி கடனில் கழிக்கப்படுகிறது. எனவே மானியத் தொகையானது விடுவிக்கப்படும் போதே தொழில் முனைவோரது வங்கி கடன் அசலில் உடனடியாக கழிக்கப்பட ஆவண செய்ய வேண்டும்.
மேலும், ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியில், லேபர் சார்ஜ் அடிப்படையில், ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவும், இதுவரை ஜிஸ்டி வரி செலுத்தாத மற்றும் தாமதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதத் தொகை நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரியை மட்டும் செலுத்தி, தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய அனுமதிக்கவும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்படவும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்து, ஜிஸ்டி வரியினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த உதவ வேண்டும்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு ஆளான, தொழில் முனைவோர்களை தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள, அசாதாரணமான மூலப்பொருள் விலை ஏற்றம், தொழில் முனைவோர்களை மீண்டும் மிகுந்த நெருக்கடியில் தள்ளுவதாக இருக்கிறது. எனவே மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, நியாயமான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் மூலப்பொருள் கிடைக்க வழிவகை செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிறைவேற்றித் தருமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி, தொழில் மற்றும் தொழில்முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வங்கி துவங்கப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கிட, தொழிற்கல்வி முடித்து வெளிவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தமிழகத்தை சேர்ந்த இளம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மாணவர்களின் திறன் மேம்படவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும்.
இது போன்ற தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரிசீலித்து நிறைவேற்றித் தந்து, தொழில் மற்றும் தொழில் முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என்று காட்மா சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சங்கத்தின் தலைவர் C.சிவக்குமார் கூறியுள்ளார்.