உச்ச நீதிமன்ற, நீதி அரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற, நீதி அரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் CPM, முத்தரசன் CPI, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், "நல்லவருக்கு விளையும் கேடு என்பது போல் தான் எனது சிறைவாசம். நல்லவர்கள் வாழவேண்டும் தீயவர்கள் ஏற வேண்டும் என்பது தான் நியதி. எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது எனது குடும்பம் உறவுகளின் பாசம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. செங்கொடியின் தியாகம், தியாகராஜன் ஐ.பி.எஸ்-ன் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் அவர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்", என்றார்.
வழக்கு
கடந்த மே.22 1991 ல், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 1998 ல் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.
இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நாளினி ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம், மேலும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், வழக்கில் உள்ள மற்றவர்களை தண்டனை காலம் முடிந்ததாக கூறி விடுதலை செய்தது.
அதை தொடர்ந்து 1999 – ல் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என பேரறிவளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நான்கு பேரும் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். ஆனால், அந்த மனுவை ஆளுநர் தள்ளுபடி செய்தார். தன்னிச்சையாக ஆளுநர் முடிவெடுத்ததாக கூறி அவரது உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2000 ல், தமிழக அரசு சிறப்பு அரசாணை மூலம் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரிய கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜீவ் காந்தி மகளான பிரியங்கா காந்தி, நளினியை சிறையில் சந்தித்து பேசினார். அந்த சம்பவம், அப்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் கருணை மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டதால் 2011ல் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தூக்கிலிட தடை விதித்தது. மேலும் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2014 ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்தால், நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனையை ரத்து செய்தது.
கடந்த 2014, பிப்.19 ல்,, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால், மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
ஆனால் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கூடாது என விடுதலைக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தடை வாங்கியது. தொடர்ந்து, சட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார். இறுதியாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும் விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே, அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டபூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர். அதன்படி, மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது, ஆளுநர் இதுதொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு எடுக்கமுடியும் எனக் கோரப்பட்டிருந்தது.
பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே, உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.