பேரறிவாளன் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கொண்டாடும் விதமாக, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிட அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கோவை: பேரறிவாளன் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கொண்டாடும் விதமாக, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிட அமைப்புகள்பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991ம் ஆண்டு பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து மனு அளித்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடினார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிட கழகத்தை சேர்ந்த பலரும் சேர்ந்து பட்டாசுகள் வெடித்தும்பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி "ஆளுநர் தடையை தகர்த்தது நீதிமன்றம், மத்திய அரசின் தடையை தகர்த்தது நீதிமன்றம்" என்ற உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை, சந்தித்த கு.இராமகிருட்டிணன், பேரறிவாளன் விடுதலைக்கு திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய போது ஆளுநர் மற்றும் மத்திய அரசு தடையாக இருந்தனர். இருப்பினும் தற்போது பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்த விடுதலை உத்தரவு என்பது அவருக்கு மட்டுமல்ல, மாநில உரிமைகளும், கவர்னர் மத்திய அரசு போன்ற தடைகளில் இருந்து, விடுவிக்கப்படுகின்ற உத்தரவாக இந்த உத்தரவு வந்துள்ளது. இந்த விடுதலை நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறை வாசிகளுக்கும் விடுதலையை பெற்று தரும், என தெரிவித்தார்.
