கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, அந்த வார்டுக்குட்பட்ட அரசு பள்ளியில், தனது சொந்த நிதியிலிருந்து மாணவியர் கழிப்பறைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் அருகே அமைந்துள்ளது மௌனசாமி நகர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில், பள்ளி மாணவியர் பயன்படுத்தும் வகையில் 2012-13 ல் கழிவறை கட்டப்பட்டது.
கழிபறைக்கு மேற்கூரை அமைக்கபடாத காரணத்தால், அந்த கழிப்பறையை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், மாணவியர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.
அருகில் பல கட்டிடங்கள் கட்டப்பட்ட காரணத்தால், தங்களின் இயற்கை உபாதையை கழிக்க மிகுந்த சிரமப்பட வேண்டிய அவல நிலையில் மாணவியர் தவித்து வந்தனர்.
இப்பிரச்சினை குறித்து சமீபத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தார்.

பத்தாண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தலைமை ஆசிரியர் அவர்களிடம் உறுதி அளித்ததுடன், உடனடியாக கழிப்பிடம் கட்டும் பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணியை கவுன்சிலர் பாபு துவக்கி வைத்தார்.

மாணவியர் கழிப்பறை கட்டடத்தின் மேற்கூரை அமைக்கபட்டதோடு, பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ணம் பூசப்பட்டு தற்பொழுது கழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி பகுதி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கவுன்சிலர் கோவை பாபுவின் இந்த நடவடிக்கை பள்ளி மாணவியர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
