அனுமதி இல்லாமல் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து செல்வதாகவும், தற்போது உயிரிழந்த பெண் அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் கழிகளை எடுக்க வந்தவர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளின் இடையே பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சிவகாமி (52). இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், சிவகாமி வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, சிவகாமி திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவர் மகள் பொன்னி, அப்பகுதியில் உள்ள குப்பைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் குப்பைகளின் இடையே அவரது கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் சுயநினைவு இழந்த நிலையில் சிவகாமியை மீட்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவகாமியை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு வந்த போத்தனூர் போலீசார் சிவகாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் சிவகாமி கீழே அமர்ந்து குப்பைகளைப் பிரித்த போது அங்கு இரண்டு டிப்பர் லாரிகளில் கொண்டு வந்த குப்பையைக் கொட்டும் போது தவறுதலாக அதில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கி விழுந்தது தெரியாமல் அவரது மீது குப்பை கொட்டப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது:-
வழக்கமாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்கக் குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு அனுமதி இல்லாமல் பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக வந்து குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துச் செல்கின்றனர். தற்போது உயிரிழந்த சிவகாமி என்பவரும் இங்கு அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் கழிகளை எடுக்க வந்தவர் தான்.
பொதுவாக டிப்பர் லாரியில் இருந்து குப்பைகளைக் கொட்டும் பொழுது பிளாஸ்டிக் கழிவுகள் தனியாகப் பறந்து விழும், அதை எடுக்கச் சென்றபோது அவர் மீது குப்பை விழுந்திருக்கலாம், இருப்பினும் அவரது இழப்பிற்கான முழு காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்தனர்.
ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கில் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் உள்ளே வராமல், இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. தற்போது வெள்ளலூர் குப்பை கிடங்கைச் சுற்றிலும் மதில் சுவர்கள் கட்டப்பட உள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் அங்கு பணியில் ஈடுபடும் காவலாளிகளும் கடுமையான உத்தரவு போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனுமதியின்றி வேறு நபர்கள் உள்ளே வரமுடியாது எனவும் தெரிவித்தனர்.