கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் மேலும் ஒரு ஆண் யானை இறந்த நிலையில் கண்டியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் போளூவாம்பட்டி, சிறுமுகை, பொள்ளாச்சி, கோவை வனச்சரகங்களில் சுமார் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. ஏற்கனவே யானைகள் தொடர் உயிரிழப்பைத் தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அடுத்த கீழ் பில்லூர் அணை பகுதியில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர், மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்குத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டால் மட்டும் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.