பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை பாஜக நிர்வாகிகள் தாக்கிய சம்பவத்தில், பாஜகவை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாகக் கூறி பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை பாஜக நிர்வாகிகள் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலயதலங்களில் வைராலக பரவி வருகிறது. சம்பவத்தில், பாஜகவை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் பிரதமர் பஞ்சாப் மாநிலம் சென்றிருந்த போது, விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் ,மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்தார்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பாஜகவினர் நாடு முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் பாஜக சிறுபான்மை அணியினர் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற பாஜகவினர் போராட்டத்தின் போது தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தாக கூறப்படுகிறது. அதனால், ஆத்திரம் அடைந்த பாஜகவினர் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். அவர் உயிருக்கு அஞ்சி அருகே இருந்த ஒரு கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.
இருப்பினும், அவரை விடாமல் துரத்திய பாஜகவினர் அவரை தாக்க முற்பட்டனர். இதனிடையே, கடையின் உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தி அந்த தள்ளு வண்டி வியாபாரிக்கு பாதுகாப்பு கொடுத்து, அங்கிருந்து பாஜகவினரை அப்புறப்படுத்த முயன்றனர்.
ஆனாலும், சில பாஜக நிர்வாகிகள் போலீசாரையும் மீறி கடைக்குள் நுழைந்து தள்ளுவண்டி வியாபாரியை தாக்கினர். இதில், அதே இடத்திலேயே அந்த வியாபாரி நிலைகுலைந்து விழுந்தார்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே பாஜகவினர் கொடூரமாக தாக்கியதை கண்டு அங்கிருந்த பெண்கள் அலறி ஓடினர்.
மேலும், போலீசார் பாஜகவினரை வெளியேற்றி தாக்குதலுக்கு உள்ளான வியாபாரியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பதும், அதே பகுதியில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
தான் மோடியை விமர்சிக்கவிலை என்றும் தள்ளுவண்டியை நகர்த்த முடியாமல் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அதனால் போராட்டம் முடிந்து விட்டதே நகருங்கள் என சொன்னதால் அந்த ஆத்திரத்தில் தான் பாஜகவினர் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தை விசாரித்த போலீசார், பாஜகவை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம், குறித்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.