கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார்.
அதற்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கோவையை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நடைபாதை காய்கறிகள் மற்றும் பழக்கடை வியாபாரிகள் சிலர், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிச் செல்ல துணிப்பையுடன் வந்தால், அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.5 தள்ளுப்படியுடன் காய்கறி பழங்களை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து பேசிய ஒரு தள்ளுவண்டி வியாபாரி, "பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வலியுறுத்தும் விதமாகவும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடி விலையை அறிவித்துள்ளோம்.
இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், துணிப்பையுடன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் முதல் முறை பிளாஸ்டிக் பையுடன் வந்தாலும், அறிவிப்பை பார்த்துவிட்டு மறுமுறை வரும் போது துணிப்பை எடுத்து வருவது மாற்றத்துக்கான நல்ல அறிகுறி" எவ்வாறு அந்த வியாபாரி தெரிவித்தார்.