பெல்ஜியத்தை சேர்ந்த இளம் பெண், இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாகச் சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையைப் படைக்கும் முயற்சியில் ஈட்டுப்பட்டுள்ள இவர், கோவை விமான நிலையத்திற்கு தற்போது வருகை தந்துள்ளார்.
கோவை: விமானத்தில் தனியாக சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெல்ஜியத்தை சேர்ந்த 19-வயது இளம் பெண் கோவை வருகை தந்துள்ளார்.
பெல்ஜியத்தை சேர்ந்த இளம் பெண், ஜாரா ரூத்தர்போர்ட்(19), இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாகச் சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையைப் படைக்கும் முயற்சியில் ஈட்டுப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி பெல்ஜியத்திலிருந்து ஷார்க் ஏரோ என்ற சிறிய ரக விமானத்தில் பயணத்தைத் துவக்கிய அவர் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா, தென் அமெரிக்கா, கொரியா, இலங்கை நாடுகளுக்குப் பயணித்து தற்போது கோவை விமான நிலையத்திற்கு தற்போது வருகை தந்துள்ளார்.
அவரது பயணத்திற்குப் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் எல்ஜி(ELGI) நிறுவனம் சார்பில் இன்று கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எல்ஜி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களைச் சந்தித்த இளம் பெண் ஜாரா ரூத்தர்போர்ட், உலகில் உள்ள 52 நாடுகளைக் கடந்து இளம் வயது சாதனையாளராவதே தனது இலக்கு எனவும், ஐஸ்லாந்தில் எரிமலையின் மீதும், நியூயார்க் நகரத்தின் மீது பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ரஷ்யாவில் காலச்சூழல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் பயணம் இனிமையாகவே இருந்ததாகவும் தெரிவித்தார்.
இளம் வயதில் உலகை சுற்றிவருவதே தனது இலக்கு என கூறிய அவர் பல பெண்களை ஊக்குவிப்பதே இந்த பயணத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பு 30- வயதுடைய அமெரிக்காவின் சேஷ்டா வெயிஸ் என்ற பெண்ணே உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளதாகவும், அதனை முறியடிக்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுமார் 30 -ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளதாகக் கூறிய ஜாரா, சிறுவயதிலேயே விமானம் ஓட்ட பழகியதாகவும் இளம் வயதில் உலகைச் சுற்றி வருவதற்கு விரும்பியதாகவும் கூறினார்.
தான் பார்த்தவர் ஐஸ்லாந்து நாட்டில் தான் பாலின பாகுபாடு குறைவாக இருப்பதாக நினைப்பதாகவும், பாதுகாப்பாகப் பயணிப்பதே முதல் இலக்கு எனவும் சைபீரியா போன்ற ஆளரவமற்ற இடத்தில் சிக்கினால் மீட்புப்பணிக்குப் பல மணி நேரம் ஆகலாம் என்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
2-தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள தமக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் ஜனவரி 13-ம் தேதி பெல்ஜியத்தில் இப்பயணத்தை நிறைவு செய்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சராசரியாக 5-மணி நேரம் தினமும் பயணிப்பதாகவும், அனைத்து நாடுகளின் மக்களும் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் கூறினார். கனவிருந்தால் பெண் என்பதற்காகத் தள்ளிப்போடாதீர்கள் எனவும் உங்களைக் கனவை நனவாக்கத் துணிந்து முன்னேறுங்கள் என்பதே சக பெண்களுக்குத் தான் கூறும் கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.
இப்பயணத்திற்கு பிறகு பொறியியல் படிக்க விரும்புவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.