துணி வாங்கிய பையை செல்போன் மீது வைத்து யாரும் கவனிக்காதபடி செல்போனை திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
கோவை: கோவையில் உள்ள துணிக்கடையில் தம்பதியினர் விலை உயர்ந்த செல்போனை யாரும் கவனிக்காதபடி திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ராஜா. இவரது கடைக்கு நேற்று துணிவாங்க தம்பதியினர் வந்துள்ளனர்.
அவர்கள் கடையில் துணி வாங்கிய பின்னர், துணிக்கு பில் கொடுக்க மேஜையின் அருகே வந்து நின்ற போது, மேஜையின் மீது சார்ஜ் போட்டு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த செல்போன் ஒன்றை யாரும் கவனிக்காதபடி திருடிச் சென்றனர்.

இந்நிலையில், தம்பதியினர் கடையில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் செல்போன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ராஜா சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது, துணி வாங்கிய பையை செல்போன் மீது வைத்து யாரும் கவனிக்காதபடி செல்போனை திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் ராஜா இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.