கோவை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
கோவை: கோவை மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகமாக வருகை தந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.
அன்று முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தந்த 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதன்படி,, கோவை புளியங்குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
அதேபோல், கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
மேலும், தமிழக அரசு பரிந்துரைத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.
தமிழக அரசின் கொரோனா பரிந்துரை படி, ஆசிரியர்கள் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.