மூன்று மாதங்களுக்கு பின் கோவையில் இருந்து ஷார்ஜா செல்ல பயணிகளுக்கு அனுமதி: 'ஏர் அரேபியா' விமானம் ஒவ்வொரு முறையும் 'ஹவுஸ்புல்'
கோவை: கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க இந்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், 'வந்தே பாரத் திட்டத்தின்' கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வெளிநாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றன. அதன்படி, கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் வாரத்தில் மூன்று நாட்கள் ஷார்ஜா- கோவை இடையே விமான சேவை வழங்கப்படுகிறது.
பயணிகளை இந்தியாவிலிருந்து ஏற்றி வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, தற்போது மீண்டும் கோவையிலிருந்து பயணிகள் ஷார்ஜா செல்ல துவங்கியுள்ளனர்.
இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஷார்ஜா- கோவை இடையே இயக்கப்பட்டு வந்த விமானத்தில் அங்கிருந்து பயணிகளை மட்டும் ஏற்றி வர மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. கோவையிலிருந்து மீண்டும் திரும்பி செல்லும்போது கார்கோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது, அந்நாட்டு அரசு,இந்தியாவிலிருந்துபயணிகளை ஏற்றி வர அனுமதிஅளித்துள்ள நிலையில், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணிகள் செல்ல துவங்கியுள்ளனர்.தற்சமயம், வாரத்தில் மூன்று நாட்கள் கோவை- ஷார்ஜா இடையே சேவை வழங்கப்படுகிறது. மொத்தம் 162 பயணிகள் பயணிக்க கூடிய இந்த விமானம், ஒவ்வொரு முறையும் "ஹவுஸ்ஃபுல்" ஆகவே செல்கிறது.
இது தவிர, ஒவ்வொரு முறையும் குறைந்தது 3 டன் மற்றும் அதற்கு மேல் கார்கோ ஏற்றி செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஏர்போட் வட்டாரங்கள் தெரிவித்தன.