திருப்பூர்: குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, குறு சிறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு காட்மா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்: குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, குறு சிறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு காட்மா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காட்மா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. எங்களது காட்மா சங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எண்ணிக்கையில் அதிகமான தொழில் முனைவோர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும், தொழில் முனைவோர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொழில் முனைவோர்களின் வேண்டுகோள்கள் இங்கே கோரிக்கைகளாக தங்களிடம் அளிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் விளைவாக, தற்போது நிலவிவரும் நெருக்கடியான சூழ்நிலையில் குறுந்தொழில் முனைவோர்களின் மிக முக்கிய கோரிக்கைகளாக, மத்திய அரசால் அறிவிக்கப்படும் சலுகைகளோ, கடன் உதவிகளோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கிடைப்பதில் நிறைய இடர்பாடுகள் இருப்பதால், குறுந்தொழில் முனைவோர்களின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக, "குறுந்தொழில் வளர்ச்சி வங்கி" தமிழக அரசால் அமைக்கப்பட்டு குறுந்தொழில் முனைவோர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் பட்சத்தில் குறுந்தொழில் வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான நிதி ஆதாரத்திற்கு, தமிழக அரசின் பங்களிப்புடன் குறுந்தொழில் முனைவோர்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும்.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் பெரும்பான்மையான தொழிற்கூடங்கள் இடப் பற்றாக்குறையின் காரணமாக ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் பரவலாக இயங்கி வருகின்றன.
அக்குறுத்தொழிற்கூடங்களின் மீது அருகாமையில் வசிப்பவர்களால் தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக ஒலிமாசு, காற்றுமாசு என்று புகார் அளிக்கப்பட்டு தொழிற் கூடங்களை பூட்டி சீல் வைக்கும் முறை தொடர்கிறது. ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் தொழிற்கூடங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது, தொழிற்கூடங்கள் வெள்ளை வகை பிரிவில் வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று தேவை இல்லை என பதில் அளிக்கப்படுகிறது எனவே இது குறித்து தெளிவு படுத்தப்பட்டு தொழிற்கூடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், இட நெருக்கடி பிரச்சனையை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
தற்போது எங்களது காட்மா சங்கத்தின் சார்பாக குறுந்தொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் பொழுது, தமிழக அரசின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் எங்களுக்கு வழங்கி அரசு துறைகள் சார்பாக முடித்துக் கொடுக்க வேண்டிய வேண்டிய வேலைகளையும், சம்பிரதாயங்களையும் விரைவாக முடித்து கொடுத்து தொழிற்பேட்டை அமைக்க உதவ வேண்டும்.
தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்பு உள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் பிரிவான 3 B பிரிவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. எனவே 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்புள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கு 3A-1 பிரிவின்கீழ் மின் இணைப்பு வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்
தற்பொழுது தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் சராசரியாக 14 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. குறுந்தொழில்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, வட்டியை குறைத்து, ரூபாய் 50 ஆயிரம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 5 சதவீத வட்டியில் சொத்துப் பிணையுமின்றி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாயிலாக கடன் உதவி வழங்கி குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவி பெருகின்ற தொழில் முனைவோர்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசம் வழங்கப்படுவதாலும், மாதத்தவணை தொகை அதிகமாக உள்ளதாலும் கடனை திருப்பி செலுத்த தொழில்முனைவோர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, குறு சிறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கிட பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்களையே நம்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதை தவிர்த்திட தொழிற்கல்வி முடித்து வெளிவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து மாணவர்களின் திறன் மேம்படவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வேலை ஆட்கள் பற்றாக்குறையை போக்கிடவும், தமிழக அரசு தனி கவனம் செலுத்தி உதவ வேண்டும் உள்ளிட்ட தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்து, தொழில் மற்றும் தொழில்முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என்று காட்மா சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.