கோவை: தமிழகத்தில், சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு தனி அமைச்சர் நியமித்து செயல்பட்டால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழகம் முன்னோடியாகத் திகழும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்தில், சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு தனி அமைச்சர் நியமித்து செயல்பட்டால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழகம் முன்னோடியாகத் திகழும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை என்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை(Renewable Energy) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை இத்துறைக்கு செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், தமிழகம் போன்ற மாநிலத்தில் மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தும், அது முழுமையாக இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை என்ற நிலை காணப்படுகிறது.
உதாரணத்துக்கு காற்றாலை மின் உற்பத்தி துறையில் மட்டும் ஆண்டுக்கு 200 கோடி யூனிட், அதாவது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார உற்பத்தி வீணாகிறது(GRID CURTAILMENT) என, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதைத் தடுக்கவும், எதிர்வரும் ஆண்டுகளில் தமிழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்க தொழில் துறை வல்லுநர்கள் தமிழக அரசுக்கு சில யோசனைகள் முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(TANSPA) பொருளாளர், சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது, ‘‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை, ‘‘இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரமாக''வே கருதப்படுகின்றன.
தமிழகத்தில் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்தின் கீழ் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 9,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி மட்டுமல்ல தமிழகத்தில் பயோ டீசல் மற்றும் எத்தனால் தயாரிப்பு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் என்பது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறையின் கீழ் பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்(2021-2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை) ஆகஸ்ட் 13 தினத்தன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சூழ்நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் வழங்கும் சில யோசனைகள்:
1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இத்துறைக்கு என தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
2. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் புதிதாக சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
3. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அதிக நிலங்கள் பயன்பாடின்றி உள்ளன. அவற்றில் விவசாயிகளை ஊக்குவித்து ஆமணக்கு பயிரிட வைக்க வேண்டும். அவற்றை பதப்படுத்தி பயோடீசல் ஆக உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும்.
4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
5. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் பெட்ரோலுடன் கலப்பதற்கு எத்தனால்(ETHANOL) உற்பத்தியாளர்களை தேடி அலைகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எத்தனால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மக்காச்சோளம், கரும்பு சக்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் அரசுடன் பொதுமக்கள் மற்றும் தனியார் இணைந்து செயல்படும் வகையில்(Public Private Partnership) திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை என்பது அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இயற்கை மனிதர்களுக்கு கொடுத்த வரம் ஆகும். அதை எக்காரணம் கொண்டும் வீணடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் இழப்பு நமக்குதான்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையை அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும் பட்சத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த மின் தேவையையும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள் மூலமே பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதனால், தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழும்'' என்று அவர் கூறினார்.