கோவை: இன்று கோவையில் கொடிசியா சார்பில் கோயம்புத்தூர் நகர வளர்ச்சி குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை: இன்று கோவையில் கொடிசியா சார்பில் கோயம்புத்தூர் நகர வளர்ச்சி குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் பொதுப்பணிகள் கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரான், இ.ஆ.ப மற்றும் கோவை மாவட்ட தொழில் துறையைச் சார்ந்த பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கொடிசியா சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.
‘‘கோயம்புத்தூர் நகரம் அனைத்து வகையிலும் விரைந்து வளர்ச்சி அடைய சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தைப் போலவே கோவையிலும் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
1994-ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் திட்டப்பணிகள், மேம்பாலங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் கையாளுதல் பணிகளை நவீனப்படுத்துதல், பேருந்து இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவை விரைவுபடுத்தப்பட வேண்டும்.
பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லாமல் மோசமான நிலையில் இருப்பதால், விரைந்து சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் 24%7 ரூயஸ் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் நிலத்தடி சாக்கடை நீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். இதற்காக தோண்டப்பட்ட குழிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரைந்து சரி செய்யப்பட வேண்டும்.
கொச்சின் எல்லை சாலை - பல்லடம் முதல் மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
பல்லடம் முதல் சிந்தாமணிபுதூர் வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் - கரூர் விரைவு நெடுஞ்சாலை உருவாக்கப்பட வேண்டும்.
செங்கப்பள்ளி முதல் கிருஷ்ணகிரி வரையிலான உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக 6 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்.
மேற்கு பைபாஸ் சாலையை உருவாக்க வேண்டும்.
சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட வேண்டும். சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்பபாளையத்தில் இருந்து நான்கு வழிச் சாலையாக்கப்பட வேண்டும்.
எல் அண்டு டி பைபாஸ் சாலையில் (NH 544) நீலம்பூர் முதல் மதுக்கரை வரை 6 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்.
கீழ்க்கண்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்:
சிங்காநல்லூர், திருச்சி சாலை NH 81
சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை NH 83
சரவணம்பட்டி, சத்தி சாலை NH 948
துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை NH 181
நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து முனையம் அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நகர ரயில் சேவை
ஏற்கெனவே உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, இருகூர், கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், பிறகு மீண்டும் இருகூர் வரும் வகையில் அமையும் நகர ரயில் தடம், சாலை போக்குவரத்தை குறைக்கும்.
கோவையில் இருந்து 100 கி.மீ தொலைவை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் மூலம் ஈரோடு, பழனி, ஷோரனூர் போன்ற ஊர்களுக்கு புறநகர் ரயில் சேவை அளிக்கலாம்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் “சார்ஜிங் நிலையங்கள்” பல இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
இந்தியாவில் முதல் இருபது விமான நிலையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் விமான நிலையம் இயங்கி வருகிறது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்கப் பணிகளை விரைந்து செய்து தர வேண்டுகிறோம்.
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லங்கா, ஏர் அரேபியா அண்டு எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கிருந்து சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. ஆகவே, கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டு கோடி பயணிகளுக்கான சேவை சரக்கு பெட்டக வசதி, விமானப் பராமரிப்பு அமையங்கள், விமானப் படை, தளவாட தொழிற் சாலைகள் என்று பல் வகையிலும் பயன்பெறும் விதத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கிட அரசாங்கம் ஒரு வரைவு திட்டத்தை உருவாக்க வேண்டும். தற்போது வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இப்பகுதியில் உள்ள தொழில் வணிகப் பெருமக்கள் கொச்சின் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
பவுண்டரி மணலை மறுசுழற்சி செய்து சாலை கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அந்த மணலைக் கொண்டு தரையில் பதிக்கக் கூடிய ஓடுகளை உருவாக்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தமிழக அரசின் ஆதரவை எதிர்நோக்குகின்றோம்.
மேற்சொன்ன திட்டங்களை செயல்படுத்துவது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பேருதவியாக இருப்பதுடன், இப்பகுதி உயர்வு பெறும் வகையிலும் மேற்சொன்ன திட்டங்களை செயல்படுத்தி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.