கோவை: புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதாகவும், பழிவாங்கும் எண்ணம் தி.மு.க அரசுக்கு இல்லை எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோவை: புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதாகவும், பழிவாங்கும் எண்ணம் தி.மு.க அரசுக்கு இல்லை எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பந்தயச் சாலை பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில்1585 கோடி மதிப்பில் 230 பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், கட்டிடங்கள் தரமானதாகக் கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கட்டுமான பணிகளில் தண்ணீர், மண், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறிய அவர், நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் மலைப்பாதைகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் போக்குவரத்து பாதிப்பைத் தவிர்க்க புதிய கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கரூரிலிருந்து கோவை வரும் சாலையில் விபத்துக்களைக் குறைக்க நான்கு வழிச்சாலை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், 2024 ஆம் ஆண்டுக்குள் கரூர் கோவை சாலையை நான்கு வழித்தடமாக மாற்றி பசுமை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவது முதலமைச்சரின் கனவு என தெரிவித்த அவர், சாலை ஓரங்களில் மரம் நட முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.வனப்பகுதிகளில் இருக்கும் சாலைகள் விரிவுபடுத்த வன இலாக்காவில் மறுப்பில்லா சான்று பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே துறையின் அனுமதிக்காகக் கட்டி முடிக்கப்படாமல் உள்ள பாலங்களின் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்க மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தவர்.
எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி ரயில்வே பாலத்திற்கான அதனை நில எடுப்பு பிரச்சனை காரணமாகக் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகிறது எனவும், அதனை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடைபெற்றுவரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை புகாரின் பேரில் நடைபெற்று வருகிறது எனவும், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.