கோவை: உழவர் சந்தைகளைப் போல 'தொழிற் சந்தைகள்' கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் அமைக்க பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எனத் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: உழவர் சந்தைகளைப் போல 'தொழிற் சந்தைகள்' கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் அமைக்க பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எனத் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேளாண்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் துவங்கப்பட்டுச் செயல்பட்டு வருவது போல, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் தொழிற்சந்தைகளை அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து கோவை கம்ப்ரஸர் தொழிற்சாலைகள் சங்கத்தின்(COCIA)தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவல் தொழில் துறையினருக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்( 2021-2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை) ஆகஸ்ட் 13 தினத்தன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் செயல்படுவது போலக் கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் தொழிற்சந்தைகளை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு இந்த தொழிற்சந்தைகள் மிக முக்கிய பங்கு வகிக்கும். உதாரணத்துக்குக் கோவை மாவட்டத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனித்தனியாகச் சிறிய இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும். அங்கு ஆண்டு முழுவதும் அந்த தொழில் நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்துத் தொடர்ந்து செயல்படும்.
ஒரே கூரையின் கீழ் அமைக்கப்படும் தொழில் சந்தைகளில் பொருள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் அவர்களது பணியை மேற்கொள்ள முடியும்.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அதேபோல இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களுக்கென கோவையில் தொழில் சந்தை அமைக்க வேண்டும்.
கோவை மட்டுமின்றி தொழில் நகரங்களான திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நகரங்களில் இதுபோன்ற தொழில் சந்தைகளை அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறு சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உதவி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 2021 வரை தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கடனுதவி திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று தமிழக அரசும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் தொழில் துறையினருக்கு அரசு எப்போதும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படும்.
இதனால் உத்வேகத்துடன் நெருக்கடியிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்குத் தொழில் நிறுவனங்கள் திரும்புவது மட்டுமின்றி தமிழகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சியில் மிகச் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.