கோவை: கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48, பெயர் மாற்றப்பட்டுள்ளது ) பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கவிதா (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ரித்தீஷ் மோட்டர் வைண்டிங் பணி செய்து வருகிறார். இவரும் கவிதாவும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரையும் அழைத்துப் பேசி கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கவிதா ரத்தீஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் கவிதா வீட்டுக்கு சென்ற ரிதீஸ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த ரிதீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவை நான்கு ஐந்து முறை குத்தியதால் கவிதா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த குமாரையும் கத்தியால் குத்திய ரதீஸ், உன்னால் தான் என் காதல் பறிபோனது என ஆத்திரத்துடன் என கூறியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கவிதாவிற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கவிதா இன்று உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரதீசை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்னை கத்தியால் காதலன் குத்தி கொலை செய்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.