கோவை : மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (37). இன்று காலை ரோந்து பணியினை மேற்கொண்டு வந்த அவர், சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சக காவல்துறையினர் விளையாடி கொண்டிருக்கும் மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களுடன் சற்று நேரம் விளையாடி விட்டு அங்கு அமர்ந்துபேசி கொண்டு இருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது உள்ளது.
மரணமடைந்த உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரனின் சொந்த ஊர் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம். இவருக்கு ஞான செளந்தரி மனைவியும், கினிகிதா (10) என்ற மகளும் உள்ளனர். 2003 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், மேட்டுப்பாளையத்தில் ஓராண்டாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.