கோயம்புத்தூர், அக். 28: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.அமைச்சர் வேலுமணி,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,கோவை மாவட்ட ஆட்சியர்,கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் விமானநிலையஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நில நிர்வாக குழு ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை விரைவாக அந்த குழு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் கோவை,திருப்பூர் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தவர்,விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் படிப்படியாக மெட்ரோ ரயில் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.