மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் 196 கட் ஆப் பதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் அருகில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் 82-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஏ.முஹம்மது சலீம் தலைமை வகித்தார். கோவை மாவட்ட பொதுச் செயலாளர் எம்.அப்பாஸ் முன்னிலை வகித்தார். கோவை மத்திய மாவட்ட துணைத் தலைவர் என்.ரகுபுநிஸ்தார் கண்டன உரையாற்றினார்.

இதில், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.