ஆழியாறு அடுத்துள்ள குரங்கு அருவியில் நேற்று (செப்டம்பர் 2) மாலை திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் விரைவாக வெளியேற்றினர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அழியார் அடுத்து அமைந்துள்ளது குரங்கு அருவி. கோவையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். வார இறுதி நாட்களில் இளைஞர்கள், பொதுமக்கள் என குரங்கு அருவி பரபரப்பாக காணப்படும்.
சில மாதங்களாக வறட்சியின் காரணமாக நீர்வரத்து இன்றி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக வால்பாறையில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சனிக்கிழமையன்று அதிகளவில் காணப்பட்டது.
இதனிடையே, வால்பாறை பகுதியில் உள்ள சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் பகுதிகளில் பெய்த மழையால், சேத்துபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குரங்கு அருவியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அருவியில் கொட்டிய தண்ணீரின் நிறம் மாறியதைக் கண்ட வனத்துறையினர், விரைந்து செயல்பட்டு அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை வெளியேற்ற தொடங்கினர். சிறிது நேரத்தில் அருவியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பியை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டத் துவங்கியது.
மேலும், இந்த வெள்ளத்தில் முட்கள், சிறு மரக்கிளைகள் போன்றவை அடித்து வரப்பட்டன. இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்தனர். வனத்துறையினரின் இந்த விரைவு நடவடிக்கையால் பெரியளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன.