அயல்நாட்டு குளிர்பானங்கள் அருந்தமாட்டோம், விற்கமாட்டோம் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு..?


கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடைபெற்ற போராட்டம், உலக மக்கள் அனைவரையும் தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. 

'தமிழர் என்றோர் இனமுண்டு; அவர்க்கென தனியோர் குணமுண்டு' என்பதை அண்டை மாநிலங்களும், தேசங்களும் அறிந்து வியந்தன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க கொம்பு சீவி விட்ட காளைகளாக திரண்டனர் இளைஞர்கள். அவர்களின் அறப்போராட்டங்களையும், பொறுப்புணர்ச்சியினையும் கண்டு சொந்த நாட்டை தவிர அத்தனை நாடுகளும் பாராட்டின.இளைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் குடும்பங்களும் போராட்டத்தில் பங்கு கொள்ள அவ்வழியே வெற்றியும் பெற்று மீசையை முறுக்கியது தமிழ் சொந்தங்கள். 

கலர் ஃபுல் கயவன்:

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மாட்டுக்காக மட்டும் குரல் கொடுக்காமல் நாட்டுக்காகவும் குரல் கொடுக்க துவங்கினர். அதில், ஒன்றே 'வெளிநாட்டு குளிர்பானங்கள் தடை'. நம் வளங்களோடு, பணத்தையும் கொள்ளையடிப்பதாக வெளிநாட்டு குளிப்பான கம்பெனிகள் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், அவ்வகையான குளிர்பானங்கள் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குரலுயர்த்தினர். மேலும், அவ்வகையான குளிர்பானங்களை பருக மாட்டோம் என்று பல்வேறு தரப்பினரும் உறுதிமொழியேற்றனர்.

இதனைக் கண்டு மெய் சிலிர்த்த தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர், கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், இங்கு இன்னும் வெளிநாட்டு குளிபானங்கள் விற்பனை வீர நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மறதியை மற்றொரு குணமாய்க் கொண்ட மக்கள் சிலரும் அவற்றை ருசிக்க தொடங்கிவிட்டனர். போராட்டக்களத்தில் உறுதியேற்று இன்று வரை அவ்வுறுதியை கடைபிடிக்கும் இளைஞர்கள், வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளையும், பருகும் மக்களையும் பார்க்கும் பார்வை ஆயிரம் அர்த்தங்களை தெளிக்கிறது.

கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு? என்று வணிகர் சங்கத்திடம் கேட்க புறப்பட்டோம். 

இதுதொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



எங்கள் வணிகர் சங்க கூட்டமைப்பில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 சங்கங்கள் உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொதுமக்கள் பலரும் அயல்நாட்டு குளிர்பான விற்பனையை தடை செய்ய வலியுறுத்தினர். இதை வணிகர் சங்க கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரிடமும் அயல்நாட்டு குளிர்பான விற்பனை செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

முரண்பாடுகள்:

அனைத்து வியாபாரிகள் சங்கங்களிடமும் எங்களது கூட்டமைப்பின் சார்பிலும் வேண்டுகோள் தான் விடுக்க முடியுமே தவிர, கட்டாயப்படுத்த முடியாது, அவ்வாறு கட்டாயப்படுத்தும் போது உறுப்பினர்கள் முரண்பட்டு செயல்படக்கூடும். எங்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று சிறிது நாட்களாக வியாபாரிகள் பலரும் அயல்நாட்டு குளிர்பான விற்பனையை நிறுத்தினர். பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் உணவங்களிலும் அவற்றி விற்பனை நிறுத்தப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வியாபாரிகள் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப கோரப்பட்டது. ஆனால், கார்பரேட் நிறுவனங்கள் அந்த டெபாசிட் தொகையை திரும்ப தர பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை டெபாசிட் தொகை செலுத்தியிருந்த வியாபாரிகள் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகைக்கு என்ன பதில்? என்று அச்சம் கொண்டனர். 

அதே நேரத்தில், சங்கங்களில் உறுப்பினர்களாக அல்லாத பல வியாபாரிகள் தங்களது கடைகளில் அயல்நாட்டு குளிபானங்களை விற்பனை செய்து வந்தனர். இதனால், சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளும் அந்த பானங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

விற்பனை குறைவு:

தற்போதைய நிலைப்படி, அயல்நாட்டு குளிர்பானங்கள் விற்பனை 50%  குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையாக அவற்றை தடை செய்ய வியாபாரிகள் நினைத்தால் மட்டும் போதாது. மக்களும் அவற்றை வாங்கி பருகாமல் இருக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முடியாது. 

அயல்நாட்டு பானங்களில் பல்வேறு நச்சு தன்மைகள் உள்ளது என்பது நாம் அறிந்திருக்கிறோம். இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை அரசு முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு எந்த விதத்திலும் முட்டுக்கட்டையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு தடை என்று அரசே அறிவிக்காத நேரத்திலும், போராட்ட களத்தில் நின்ற மக்களின் வேண்டுகோளுக்காக அத்தகைய பொருட்களின் விற்பனையை நிறுத்துவதாக வணிகர் சங்கத்தினர் அறிவுறுத்தினர். அதை மீறியும் தற்போது அயல்நாட்டு குளிபானங்கள் விற்பனையாகிறது என்றால், அவற்றை வாங்கிப்பருகும் நம்மிடம் தான் பெரும் தவறு உள்ளது. போராட்டக்களத்தில் ஆவேசத்தில் எடுத்த முடிவாக அல்லாமல், மக்கள் மனமுவந்து முன்னெடுத்த முடிவாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...