திருப்பூர் வேலம்பாளையம் அருகே செயல்பட்டு வந்த லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.
வேலம்பாளையம் அடுத்த ஏ.பி.நகரில் முத்து என்பவருக்கு சொந்தமான லேபிள் பேக்கிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 5க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அங்குள்ள இயந்திரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தீ மளமளவென அருகில் இருந்த வீட்டிற்கும் பரவியுள்ளது.
தீ பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எரிந்து சேதமானது.
இந்நிலையில் இந்த விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்த அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.