பல்லடம் அடுத்த சேடபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் 73ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளிக்கு தேவையான பொருட்களை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்ற பொதுமக்கள்.
திருப்பூர்: பல்லடம் அருகே சேடபாளையம் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட சேடபாளையம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியின், 73வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மின்விசிறி, சேர்கள், குடங்கள், குப்பை தொட்டி, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கிராம மக்கள் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுடன் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒன்று கூடினர். இதனையடுத்து பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் பெண்கள் முன்னே செல்ல பள்ளிக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பின்னால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு வந்த பொதுமக்களை தலைமை ஆசிரியை ரெஜினா மேரி மற்றும் சக ஆசிரியர்கள் வரவேற்று உபசரித்தனர். இதையடுத்து பள்ளிக்கு வழங்கிய பொருட்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.