கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே லட்சுமி நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரில் கடந்த பத்தாம் தேதி கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு நபர்கள், அங்கு தனியாக இருந்த வித்யா என்ற பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று மாலை பழைய சோதனை சாவடி முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பநாதன் மற்றும் லியோஜெபிரியன் என்பது தெரியவந்தது.
இருவரும் கோவையில் உள்ள மெரைன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும், கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், லட்சுமிநகர் பகுதியில் நோட்டமிட்ட அவர்கள், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றதும் விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யபட்ட இருவரையும் போலீசார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.