நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிகாலை வேளைகளில் கொட்டும் உறை பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீராக காட்சி அளித்தது.
நீலகிரி: தமிழகத்தில் உள்ள முக்கிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. இங்கு கோடை காலத்தில் இதமான காலநிலையும் குளிர்காலத்தில் கடும் குளிரும் நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது. குளிர்காலம் என்பது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை நீடிக்கும்.
ஆனால் நடப்பு குளிர்கால சீசனை பொறுத்தவரையில், டிசம்பர் மாத இறுதியிலே தாமதமாக தொடங்கியது. தொடக்க காலத்தில் நீர் பனிப்பொழிவாக மட்டுமே அதிகாலை நேரங்களில் காணப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக உறை பனியாக மாறிவிட்டது.
இதனால், அதிகாலை நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாக பதிவாவதால், ஊட்டியில் உறை பனிப் பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக, ஊட்டி நகரப் பகுதியிலும் அதனை சுற்றியுள்ள காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் கடும் உறை பனி படிந்து காணப்படுகிறது.
அந்த வகையில், இன்று காலை வழக்கம்போல தாவரவியல் பூங்காவில் 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவான நிலையில், காந்தல், எச் பி எஃப், தலைக்குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றது. இதனால், அந்தப் பகுதிகள் அனைத்திலும் உறைபனி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல படிந்து காணப்பட்டது.
இந்த உறைபனியால், ஊட்டி சுற்று வட்டாரபகுதியே குட்டி காஷ்மீரைப்போல காட்சியளித்தது. வாகனங்கள் மீது சுமார் ஒரு இன்ச் அளவிற்கு படித்திருந்த உறை பனியை பொதுமக்கள் கைகளால் எடுத்து வீசி விளையாடி மகிழ்ந்தனர். உறைபனியுடன், கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.