உதகை - மஞ்சூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், 2 சிறுத்தைகள் அடுத்தடுத்து சாலையை கடந்து சென்றதை கண்டு அச்சமடைந்த நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 67 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராம பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இதனால் இரவு நேரங்களில் முக்கிய மலைப் பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கரடிகளையும், சிறுத்தைகளையும் காணும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் நேற்றிரவு உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்துள்ளனர்.
இதனை காரில் இருந்த நபர்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.