கோவை சூலூர் பகுதியில் கஞ்சா விற்க முயன்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கங்கா பாஹா (வயது 30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் உள்ள பகுதிகளில் ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் சூலூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கங்கா பாஹா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான கங்காவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், போதை பொருட்கள் விற்பனை செய்வது உட்பட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9498181212 என்ற செல்போன் எண்ணிற்கு அல்லது 7708100100 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.