ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த மூவரை அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (72). இவர் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே வந்த போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் சீனிவாசன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்டு, சீனிவாசன் மற்றும் மோதிய வாகனத்தில் வந்த தயா மற்றும் முகமது தவ்ஃபிக் ஆகியோர் காயமடைந்தனர்.
அப்போது, அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக தனது கான்வாயை நிறுத்தி இறங்கி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
உடனே ஆம்புலென்ஸுக்கு தகவல் அளித்த நிலையில், விபத்தில் சிக்கிய மூவரை தனக்கு பாதுகாப்புக்கு வந்த எஸ்கார்ட் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.
விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு, ஆம்புலன்ஸ்காக காத்திருக்காமல் தனது எஸ்கார்ட் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.