சாலையை விரிவாக்கம் செய்வதாலும், நான்கு மற்றும் ஆறு வழி சாலைகள் அமைப்பதாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள நவஇந்தியா சந்திப்பு பகுதியில் Radisson Blu கூட்டரங்கத்தில் சாலை வடிவமைப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் மேலாண்மை கொள்கை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளா் பிரதாப் பேசியதாவது, கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைத்து இடங்களிலும் சவாலாக உள்ளதாக கூறினார். கொரோனா காலத்திற்கு முன்பை விட தற்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சாலையை விரிவாக்கம் செய்வதாலும், நான்கு மற்றும் ஆறு வழி சாலைகள் அமைப்பதாலும் வாகன நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறினார்.
மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டும், வாகனங்களை சாலைகளிலும், நிறுத்த அனுமதி இல்லா இடங்களிலும் வாகனங்களை பலரும் நிறுத்துவதாக கூறிய ஆணையாளர் பிரதாப், ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து நகரமைப்பு பிரிவு மூலம் மீட்டெடுத்து வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளதாக கூறினார். சரியான முறையில் வாகனங்களை நிறுத்தாமல் சாலைகளில், அனுமதியற்ற இடங்களிலும் நிறுவத்துவதினாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறிய அவர், எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து சரியான முறையில் வாகனங்களை நிறுத்தினால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளார் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, தேவையற்ற மற்றும் அனுமதியற்ற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களினால் தான் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக கூறினார். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய களஆய்வு செய்து நிரந்தரமாக காண வேண்டும் என்று கூறிய அவர், அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என்றும் அதனை முறைபடுத்துவது அவசியம் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் அசோக்குமார், மத்திய மண்டல தலைவா் மீனாலோகு, நகரமைப்பு குழு தலைவர் சோமு, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், அழகு ஜெயபாலன், சுமா, முனியம்மாள், மாநகராட்சி செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.