பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைக்கு எதிராக போராடி ஓய்ந்து போன சமூக ஆர்வலர், நெடுஞ்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வட்டாட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்லும் பிரதான சாலையாக பல்லடம் பகுதி உள்ளது.
இந்நிலையில், பல்லடம் நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் எதிர்புறமாக ஒரு டாஸ்மாக் கடை, செட்டிபாளையம் பிரிவில் ஒரு டாஸ்மாக் கடை, காளிவேலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தனியார் பார் என பல்லடம் நெடுஞ்சாலையில் வழிநெடுக செயல்படும் மதுபான கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் மது அருந்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் மற்றும் பெண்கள் உள்ள பயணிகள் பாதிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் மனு அளிக்கப்பட்டு வந்தது.
அவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய சமூக ஆர்வலர் அண்ணாதுரை, மனம் தளராமல் நூதன மனு ஒன்றை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை தாசில்தாரிடம் அளித்துள்ளார்.
அம்மனுவில், நெடுஞ்சாலையில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தற்போது புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மதுவை ஒழிக்க போராடி ஓய்ந்த சமூக ஆர்வலர்கள் நூதன முறையில் சாலையை மாற்றக்கோரி மனு கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.