6 நாட்கள் நடைபெறவுள்ள இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் குழுவுக்கு 3 பேர் என 50 குழுக்களில் மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை தகவல்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல பகுதி 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் மற்றும் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் எண்ணிக்கை மற்றும்அவற்றின் வாழ்வாதாரம் குறித்து பருவமழைக்கு முன்பு மற்றும் பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுக்கும் பணி இன்று காலை துவங்கியது. சுமார் 150 பேர் இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்று பேர் அடங்கிய நபர்கள் என்ற வீதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் வனப்பகுதியை நேர்க்கோட்டு பாதையாக பிரித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று முதல் இரண்டு நாட்கள் வரை வனவிலங்குகளின் எச்சம், கால் தடம் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நீரோடை மற்றும் வனவிலங்குகளை நேரடியாக கண்டும் அதற்கான எண்ணிக்கையும் வைத்து கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறும்.
ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் இதற்காக பிரத்யேமாக தயாரிக்கப்பட்டசெல்போன் செயலி , மற்றும் தெர்மாமீட்டர், ஜிபிஎஸ் கருவிகள் மூலம் துல்லியமாக இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
ஆறு நாட்கள் முடிந்த பிறகு பருவமழைக்கு முன்பு வனவிலங்கு எண்ணிக்கை மற்றும் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக கண்டறிய முடியும்.
இவ்வாறு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.