விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவில் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஏராளமான இடங்களில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில்பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதி தோறும் பொது இடங்களில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஆசியாவிலேயே மிக உயரமான (19 அடி) புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில், இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரைதரிசனம் செய்து செல்கின்றனர்.
இதேபோல, மிகவும் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகரின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினரால் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண விநாயகர் சிலைகளையும் ஏராளமானபொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும்காவல்துறையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விநாயகர் சிலையை கரைக்கும் நாளன்று 1600 போலிசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.