இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட , முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோவை: சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளஅக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் அமைத்திருந்த இரும்புத் தடுப்புகளை மீறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால், போலீசார் மற்றும் இளைஞர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தடையை மீறி உள்ளே செல்ல முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் கூறும்போது :மத்திய அரசு ராணுவ துறையை ஒப்பந்த அடிப்படையில் விட முயல்கிறது. ராணுவத் துறையில் தான் பணி பாதுகாப்பு உள்ளது. ஆனால், அந்தத் துறையிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பணிக்குச் செல்லும் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. மேலும், ராணுவத்தில் பாதுகாப்பு பணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் இருக்க வேண்டிய சூழலில், அனுபவம் இல்லாதவர்களை இந்திய விமானப்படை, கப்பல்படைஆகியவற்றில் பணியாற்ற வைப்பது ஆபத்தானது", என்று தெரிவித்தார்.