தொழிலாளர்கள் அனைவரும் கடந்த கால அதிமுக ஆட்சியையும் தற்போது உள்ள திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் உரையாற்றினார்.
கோவை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். இதில் 13 கோடியே 82-லட்சத்து 49-ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கோவையில் 3000 பதிவு பெற்ற பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு சாதனம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

2011-ல் நான் வாரிய தலைவராக இருந்த போது இந்த வாரியத்தில் 32 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகவும், அதன்பின் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு பிறகு தற்போது நான் பொறுப்பேற்ற பின் பார்த்தால் 13 லட்சம் பேராக குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதன்பின் இந்த ஓராண்டு காலத்தில் ஏறத்தாழ 6 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு காரணம் முதல்வரின் முயற்சியும் ஆக்கமும் ஊக்கமும் என கூறினார். கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்த ஒரு நலதிட்டமும் உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது திமுக ஆட்சியில் சாலை விபத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பேறுகால உதவித்தொகை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை தாண்டி வீடு கட்டும் தொழிலாளி வீதியிலே உறங்குகிறார் என பேரறிஞர் அண்ணா சொன்னதற்கு அவருடைய தம்பி கலைஞர், அவருடைய மகனான முக ஸ்டாலின் தற்போது பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் இலவசமாக அளிக்க உத்தரவிடுள்ளதை சுட்டி காட்டினார்.

எனவே மக்கள் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியையும் இந்த ஓராண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு யார் இந்த நாட்டிற்கு சிறந்த நிர்வாகத்தை அளிக்கிறார்கள், யார் வந்தால் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், யாருடைய தலைமையில் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.