கோவையில் குழந்தை கடத்தல்காரன் என நினைத்து பஞ்சு மிட்டாய் விற்று வந்த வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!

பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த போது, சாலையைக் கடக்க தடுமாறிய சிறுமிகளுக்கு அவர் உதவியதாக தெரிகிறது. அதை பார்த்த பொதுமக்கள், அந்த வடமாநில இளைஞர் குழந்தைகளை கடத்தி செல்வதாக தவறுதலாக நினைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



கோவை: கோவையில் பஞ்சு மிட்டாய் விற்று வந்த வடமாநில தொழிலாளர் ஒருவரை, தவறுதலாக குழந்தை கடத்தல்காரர் என்று நினைத்து பொதுமக்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நகரமான கோவை மாவட்டத்திற்கு பீகார், ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தனியாகவும், குடும்பத்துடனும் வந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

சமீபகாலமாக, வடமாநில தொழிலாளர்கள் கால்நடை, விவசாய பணிகள் மற்றும் கட்டட தொழில்களிலும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, பானிபூரி, பஞ்சு மிட்டாய், குல்பி, ஜுஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை வியாபாரத்திலும்,வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கோவையில் பணிக்காக வரக்கூடிய வடமாநிலத் தொழிலாளர்களின் முழு விவரங்களை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தினர் சேகரித்து அதை காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவைக்கு வேலைக்காக வரும் வட மாநில தொழிலாளர்கள் விபரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதிக்கு பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் வழக்கமாக விற்பனைக்கு வரும் பகுதி என்பதால் அங்குள்ள குழந்தைகளுக்கும் நன்கு தெரிந்தவராக இருந்துள்ளார்.



அவ்வாறு, விற்பனைக்கு வந்த போது சாலையைக் கடக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த 3 மற்றும் 10 வயது சிறுமிகள் சாலையை கடக்க உதவியதாகதெரிகிறது. அந்த வடமாநில தொழிலாளி, இரு குழந்தைகளையும் கையைப் பிடித்து சாலையை கடக்க வைத்துள்ளார்.

இக்காட்சியை கண்ட பொதுமக்கள், அந்த வடமாநில இளைஞர் குழந்தைகளை கடத்தி செல்வதாக தவறுதலாக நினைத்து, அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் அந்த இளைஞரை அழைத்து சென்று விசாரித்த போது, அவர் சாலையை கடக்க உதவியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதே வடமாநில இளைஞர் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் பஞ்சு மிட்டாய் வியாபாரத்திற்கு வந்துள்ளார். அப்போது, சிங்காநல்லூர் பகுதியில் அந்த வடமாநில தொழிலாளர் சாலையை கடக்க உதவிய சிறுமியின் தந்தை அவரை பார்த்துள்ளார். நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், இன்று எப்படி வெளியே வந்தார் என்றுஅதிர்ச்சியடைந்த அவர், அந்த வடமாநில இளைஞரை பொது இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.



மேலும், அங்கு வந்த பொதுமக்களிடமும் இவர் சிங்காநல்லூர் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் எனக் கூறியுள்ளார்.மேலும், இவர்கள் ஒரு நெட்வொர்க் போல செயல்பட்டு குழந்தைகளை கடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட,அங்கிருந்த பொதுமக்களும் இந்த பஞ்சு மிட்டாய் விற்க வந்த இளைஞரைசரமாரியாக தாக்கத் தொடங்கினர்.



இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரேஸ் கோர்ஸ் போலீசார், மொழி தெரியாமல், செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர். அப்போது, குழந்தை கடத்தல்காரர் என தவறாக எண்ணி அந்த இளைஞரை மீண்டும் பொதுமக்கள் தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுமியின் தந்தையையும், பொதுமக்களையும் போலீசார் எச்சரித்ததோடு, சந்தேகம் இருந்தால் நேரடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டுமே தவிர, என்னவென்று விசாரிக்காமல் தாக்குதலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம், என எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரை விசாரணைக்குப் பின், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், ரேஸ் கோர்ஸ் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதற்குள், அந்த வடமாநில தொழிலாளர் தாக்கப்படும் வீடியோ சமூக வலயதளங்களில் வைரலாக பரவியது. கோவையில் வடமாநில இளைஞர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பலர் அந்த வீடியோ காட்சிகளை அவர்களது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்தனர்.



எந்த தவறும் செய்யாத மொழி தெரியாத தொழிலாளியை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, அவரை குழந்தை கடத்தல்காரர் என்று முத்திரை குத்தி அவரது முகத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, நடந்த விபரங்களை முழுமையாக அறியாமல் ஒருவரை பொது இடத்தில் வைத்து தாக்குவதும், அதை வீடியோவாக பதிவு செய்து, தவறான தகவல்களோடு இணையதளத்தில் பரப்பி விடுவது வாடிக்கையாகி வருகிறது.  

இதனால், பாதிக்கப்படும் இளைஞர் பணிக்குச் செல்லும் இடமெல்லாம், இதே அவப்பெயர் தொடர்வதும், மற்ற வட மாநில பணியாளர்கள் மீதும் வெறுப்புணர்ச்சி ஏற்படும் அபாயமும் உள்ளது. 

பல நேரங்களில், பல்வேறு சம்பவங்களை, செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பும் பொதுமக்கள், மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது, என்றனர் சமூக ஆர்வலர்கள்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...