கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59 கோடி மதிப்பில் 9 முடிவுற்ற பணிகள் மற்றும் 49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59 கோடி மதிப்பில் 9 முடிவுற்ற பணிகள் மற்றும் 49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சியினை, அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு பேசுகையில், "மாநகராட்சிகளைப் பொருத்தவரை இருபத்தி நான்காயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 591 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஒரு வருட காலத்திற்குள் பில்லூர் குடிநீர்திட்டமும் செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக நடைபெறுவதாக சிலர் கூறிய நிலையில், அதனைப் பார்வையிட்டு விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவாணி அணை தொடர்பாக கலைஞர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் நீர் இன்னும் தரப்படாத நிலையில், கேரள முதலமைச்சருக்கு நமது முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. இங்குள்ள அதிகாரிகளை அனுப்பி, அந்த பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற முயற்சி எடுக்கப்படும்.
மாநகராட்சியில் செய்யப்படாத பணிகளை, முடிக்கப்பட்டதாக கணக்குகாட்டி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதன்படி, 7 காண்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை மாநகராட்சியில் 5 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் 145 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி
மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்", என தெரிவித்தார்.
பின்னர், வாலாங்குளத்தில் 67.86 கோடி மதிப்பில் சீர்மிகு நகரம் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்குஉட்பட ரேவதி நகர் பகுதியில் 2.5 கோடி மதிப்பில் இருபத்தி நான்கு மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.