தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை நீலம்பூர் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "இந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்? தமிழ் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் எத்தனை பேர்? தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழியை கற்றுகொண்டு, இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள். ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசி பழகுவது நல்லது.
பிறந்த குழந்தை 6 மாதத்திற்கு தன்னுடைய அம்மாவின் தாய்ப்பாலை குடித்தால் தாய் சொல்லை கேட்பார்கள். இப்போதெல்லாம், தாய்ப்பால் குடிப்பதில்லை, கன்று குட்டியின் பாலைத்தான் குடிக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்கள் தாயின் சொல்லைக் கேட்காமல் டாஸ்மாக்கில் போய் குடிக்கிறார்கள். 10 கோடி பேர் இந்தியாவில் போதைக்கு அடிமையாக உள்ளார்கள்", என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.. திராவிட மாடல் போல திராவிட மாதிரி என இருந்தால் சரியாக இருக்குமோ? என எண்ணுகிறேன். தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும். திராவிட மாடல் (ஆங்கில சொல்) என்று சொல்வதற்கு திராவிட மாதிரி (தமிழ் சொல்) என சொன்னால் சரியாக இருக்குமோ என்பது எனது யோசனை.
மற்ற மொழியை வேண்டாம் என சொல்வதற்கு நம்ம மொழியை முழுவதும் கற்றுக்கொள்வோம்", என்றார்.
புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து, என தெரிவித்தார்.